தேடுதல்

இந்தோனேசியாவில் நீரழிவு நோய் பரிசோதனை இந்தோனேசியாவில் நீரழிவு நோய் பரிசோதனை  (AFP or licensors)

நவம்பர் 14, நீரழிவு நோய் விழிப்புணர்வு உலக நாள்

ஆப்ரிக்காவில் கோவிட்-19 கொள்ளைநோயால் இறப்பவர்களில் ஏறத்தாழ ஐந்தில் ஒருவர், நீரழிவு நோயால் தாக்கப்பட்டிருந்தவர்கள் என்று WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, இந்நோயால், பலர் வேறுபல நோய்களுக்கும், கோவிட்-19 கொள்ளைநோய்க்கும் எளிதில் பலியாகும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார். 

நவம்பர் 14, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட நீரழிவு நோய் விழிப்புணர்வு உலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், இந்நோயைத் தடுப்பதற்கும், இதற்குச் சிகிச்சை அளிப்பதற்கும், நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், குறைந்த மற்றும், நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்நோய் தொடர்ந்து வேகமாகப் பரவி வருகின்றது என்று கூறியுள்ளார்.

இந்த நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு, உலகளாவிய நடவடிக்கை ஒன்றை, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம், அடுத்த ஆண்டில் ஆரம்பிக்க உள்ளது எனவும், கூட்டேரஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

உலக அளவில், 2014ம் ஆண்டின் சுட்டெண்ணின்படி, ஏறத்தாழ 42 கோடியே 20 இலட்சம் வயதுவந்தோர், நீரழிவு அல்லது சர்க்கரை நோய் எனப்படும், இந்நோயால் தாக்கப்பட்டுள்ளனர். இவ்வெண்ணிக்கை, 1980ம் ஆண்டில் ஏறத்தாழ 10 கோடியே 80 இலட்சமாக இருந்தது என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

ஆப்ரிக்காவில் கோவிட்-19 கொள்ளைநோயால் இறப்பவர்களில் ஏறத்தாழ ஐந்தில் ஒருவர், நீரழிவு நோயாளிகள் என்றும், உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

கண்பார்வை இழப்பு, சிறுநீரகம் செயல் இழத்தல், மாரடைப்பு, பக்கவாதம், கை கால் உறுப்பு அகற்றல் போன்றவைகளுக்கு, இந்நோய் முக்கிய காரணமாக இருப்பதோடு, தற்போதைய கொள்ளைநோய், இந்நோயாளிகள் குறித்து மேலும் கவலையை அதிகரித்துள்ளது என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது. (UN)

14 November 2020, 15:05