தேடுதல்

Vatican News
ஏமனில், 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இடம்பெற்று வரும் போர் ஏமனில், 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இடம்பெற்று வரும் போர்  (ANSA)

ஏமனில் இடம்பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படுமாறு…

ஜி20 நாடுகளின் மாநாட்டில், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உட்பட, ஏமனில் இடம்பெறும் போருக்கு ஆயுதங்களை வழங்கும் ஜி20 அமைப்பைச் சேர்ந்த பல நாடுகள் பங்குபெறுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏமனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக, சவுதி அரேபியப் படைகளின் தலைமையில் நடத்தப்படும் குண்டுவீச்சு தாக்குதல்களுக்கு, ஜி20 அமைப்பைச் சேர்ந்த பல நாடுகள் ஆயுதங்களை வழங்கிவருகின்றன என்று, CAAT எனப்படும், ஆயுத வர்த்தகத்திற்கெதிரான அமைப்பு குறை கூறியுள்ளது.

ஏமனில் குண்டு வீச்சு தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, குறைந்தது, 540 கோடி பவுண்டு பெறுமான ஆயுதங்களை, பிரித்தானியா, சவுதி அரேபியாவுக்கு வழங்கியுள்ளது என்று கூறும் CAAT அமைப்பு, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், நவம்பர் 21 இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள, ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில், ஏமனில் போர் முடிவுக்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

ஏமனில், 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இடம்பெற்று வரும் கடும் குண்டு வீச்சு தாக்குதல்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், மற்றும், இவை கடும் மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நவம்பர் 22, இஞ்ஞாயிறன்று நிறைவடையும் ஜி20 நாடுகளின் மாநாட்டில், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உட்பட, ஏமனில் இடம்பெறும் போருக்கு ஆயுதங்களை வழங்கும் ஜி20 அமைப்பைச் சேர்ந்த பல நாடுகள் பங்குபெறுகின்றன. (ICN)

21 November 2020, 14:53