தேடுதல்

இஸ்பெயின் நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 99 வயது மூதாட்டி இஸ்பெயின் நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 99 வயது மூதாட்டி 

அக்டோபர் 31 - பெருநகரங்கள் உலக நாளுக்கு ஐ.நா. அவை செய்தி

தங்களுக்குள் ஆழமான, உறுதியான பிணைப்புக்களை உருவாக்கியுள்ள மனித குழுமங்களின் முக்கியத்துவத்தை, கோவிட்-19 கொள்ளைநோய் காலம் நமக்கு உணர்த்தியுள்ளது - ஐ.நா. தலைமைச் செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தங்களுக்குள் ஆழமான, உறுதியான பிணைப்புக்களை உருவாக்கியுள்ள மனித குழுமங்களின் முக்கியத்துவத்தை, கோவிட்-19 கொள்ளைநோய் காலம் நமக்கு உணர்த்தியுள்ளது என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் உலகிற்கு விடுத்துள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

அக்டோபர் 31, இச்சனிக்கிழமை, பெருநகரங்கள் உலக நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், பெருநகரங்களில் வாழும் சிறு, சிறு சமுதாயங்கள் அந்நகரங்களுக்கு ஆற்றிவரும் பணிகள் மிக முக்கியமானவை என்று கூறியுள்ளார்.

இந்தக் கொள்ளைநோயினால் உருவான பேரளவு துன்பங்களை பெருநகரங்கள் அடைந்துள்ளன என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், இவ்வேளையில், நகரங்களில் வாழும் அடித்தள சமுதாயங்கள் ஆற்றிவரும் பணிகள் இந்நகரங்களைக் காத்துவந்துள்ளன என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

பெருநகரங்களின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே உருவான தன்னார்வக் குழுமங்கள், தேவையில் இருப்போருக்கு, குறிப்பாக, வயதில் முதிர்ந்தோருக்கு தேவையான உணவு, மருத்துவ உதவிகள் ஆகியவற்றை வழங்கியதை, தலைமைச் செயலர் கூட்டேரஸ் அவர்கள் தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.

இனி வரும் காலங்களில் இத்தகைய அடித்தள குழுமங்களின் பங்கை இன்னும் அதிகமாக ஊக்குவித்து, நலமான, பாதுகாப்பான பெரு நகரங்களை உருவாக்க முயல்வோம் என்று  கூட்டேரஸ் அவர்கள் தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

பெரு நகரங்களில் மேற்கொள்ளப்படும் அடிப்படை பணிகளே அந்நகரங்களை வளமாக்குகின்றன என்ற கருத்தை வலியுறுத்த, 2013ம் ஆண்டு முதல், ஐ.நா. நிறுவனத்தால், பெருநகரங்கள் உலக நாள் கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு நடைபெறும் இந்த உலகநாளையொட்டி, இந்தக் கொள்ளைநோய் காலத்தில் நலப்பணிகள் ஆற்றிய பணியாளர்களும், அப்பணிகளை ஒருங்கிணைத்த மேலதிகாரிகளும், சிறப்பான முறையில் பாராட்டப்படுவர் என்று WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது. (UN)

30 October 2020, 14:04