தேடுதல்

சீனாவில் வறுமை நிலை சீனாவில் வறுமை நிலை  (ANSA)

உலகின் வறியோரோடு ஐ.நா. தலைமைச் செயலர் ஒருமைப்பாடு

உலகினர் அனைவரும் எதிர்கொள்ளும் கோவிட்-19 கொள்ளைநோயிலிருந்து விடுபட, எல்லாரும் ஒன்றுசேர்ந்து செயல்படவேண்டும். வறுமை ஒழிப்பு உலக நாளில், உலகின் வறியோரோடு நம் தோழமை உணர்வை வெளிப்படுத்துவோம் – ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 17, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, வறுமை ஒழிப்பு உலக நாளுக்கென, காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், கொரோனா கொள்ளைநோய், உலகின் மிக வறிய மக்களின் பிரச்சனையை இரட்டிப்பாக்கியுள்ளது  என்று குறிப்பிட்டுள்ளார். 

கோவிட்-19 காலத்திலும், மற்ற காலங்களிலும் வறுமையில் வாழ்கின்ற அனைத்து மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறு அழைப்பு விடுத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமியால் அதிகம் தாக்கப்படும் நிலையிலுள்ள வறியோருக்கு நலவாழ்வு பராமரிப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன என்று கூறியுள்ளார்.

தற்போதைய கொள்ளைநோயால், இவ்வாண்டில் 11 கோடியே 50 இலட்சம் பேர் வரை, வறுமைக்கோட்டிற்குக்கீழ் தள்ளப்படுவர் என்றும், கடந்த பத்தாண்டுகளில் இவ்வெண்ணிக்கை முதன் முதலாக அதிகரித்துள்ளது என்றும், கூட்டேரஸ் அவர்கள், கூறியுள்ளார்.

வேலை இழப்பு, குறைவான சமுதாயப் பாதுகாப்பு போன்வற்றை எதிர்கொள்ளும் பெண்கள், தற்போதைய நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும், இக்காலத்தில் வறுமைக்கு எதிரான முயற்சிகள், தீவிரமான முறையில் அதிகரிக்கப்படவேண்டும் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

1992ம் ஆண்டில், வறுமை ஒழிப்பு உலக நாள் உருவாக்கப்பட்டது. ‘சமுதாய மற்றும், சுற்றுச்சூழல் நீதி அனைவருக்கும் கிடைப்பதற்கு, ஒன்றுசேர்ந்து செயல்படுவோம்’ என்ற தலைப்பில், இவ்வாண்டு இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. (UN) 

17 October 2020, 15:05