தேடுதல்

புத்தமத துறவி புத்தமத துறவி 

விதையாகும் கதைகள்: நம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால்...

ஒரு காரியத்தில் இறங்கும்போது, அது நிறைவேறும்வரை, முழுநம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே, வாழ்வில் நாம் நினைத்தது கிடைக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஓர் ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் எப்போதெல்லாம் நடனமாடுகின்றாரோ அப்போதெல்லாம் அந்த ஊரில் மழை பெய்தது. அதனால் அந்த ஊர் மக்களுக்கு, எப்போதெல்லாம் மழை தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவரிடம் சென்று நடனமாடச் சொல்வார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த துறவியரும் நடனமாடுவார், மழையும் பெய்யும். ஒருநாள் அந்த ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்கு நான்கு இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் அந்த செய்தியைக் கேள்விப்பட்டு, ஆர்வத்தோடு அந்த துறவியிடம் சென்றனர்.  அந்நேரத்தில் அந்த துறவி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த இளைஞர்களில் ஒருவன், நீங்கள் நடனமாடினால் மழைவரும் என்றார்கள், அப்படியானால் நாங்களும் நடனமாடினால் மழை வருமா என்று கேட்டான். ஆடுங்கள் என்றார் துறவி. முதலில் ஓர் இளைஞன் அரை மணிநேரம் தொடர்ந்து ஆடினான். மழை வரவில்லை. இவ்வாறு அந்த நால்வரும் ஒருவர் பின் ஒருவராக, எவ்வளவு நேரம் ஆடியும் மழை வரவில்லை. பின்னர் துறவியிடம், நீங்கள் ஆடுங்கள், மழை வருகிறதா என்று பார்ப்போம் என்றார்கள் இளைஞர்கள். சரி, ஊர் மக்கள் வரட்டும், அவர்கள்முன் நான் நடனமாடுகிறேன் என்றார் துறவி. ஊர் மக்களும் வந்தனர். துறவியும் ஒரு மணி நேரம் ஆடினார். மழை வரவில்லை. ஆனால் ஊர் மக்கள் மட்டும் வானத்தையும் கார்மேகத்தையுமே பார்த்தவண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவரது கைகளிலும் குடைகளும் இருந்தன. துறவியும் தொடர்ந்து ஏறத்தாழ பத்து மணிநேரம் ஆடினார். மழையும் வரத்தொடங்கியது. இது அந்த நான்கு இளைஞர்களுக்கும் வியப்பாக இருந்தது. ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தத்துடன் அங்கிருந்து சென்றனர். பின்னர், இளைஞர்கள் துறவியிடம் சென்று அதற்கு காரணம் கேட்டனர். அதற்கு துறவியார், ஊர் மக்களிடமும் என்னிடமும் நம்பிக்கை இருந்தது, அதனால் மழை வந்தது. எனவே ஒரு காரியத்தில் இறங்கும்போது, அது நிறைவேறும்வரை, முழுநம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே, வாழ்வில் நாம் நினைத்தது கிடைக்கும் என்று சொன்னார். (IBC Tamil)

29 October 2020, 14:09