தேடுதல்

முதியோர் இல்லம் ஒன்றில் அமர்ந்திருக்கும் அன்னை முதியோர் இல்லம் ஒன்றில் அமர்ந்திருக்கும் அன்னை 

விதையாகும் கதைகள் : மரணத்திலும் மகனின் தேவைகளை...

மரணப்படுக்கையிலும் மகனின் தேவைகளை நிறைவுசெய்ய விழைவது, தாயின் உள்ளமே!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

தந்தை இறந்ததும், வயதுமுதிர்ந்த தன் தாயை, முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்துவிட்டார் மகன். சில மாதங்கள் சென்று, அவ்வில்லத்திலிருந்து, மகனுக்குச் செய்தி வந்தது. "உங்கள் தாய் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் வந்து அவரைப் பாருங்கள்" என்று அச்செய்தி கூறியது. தாயைச் சந்திக்கச் சென்ற மகன், அவர் மிகவும் தளர்ந்திருப்பதைக் கண்டார். "அம்மா, உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?" என்று ஒப்புக்காகக் கேட்டார்.

அந்த அன்னை, "மகனே, இந்த முதியோர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. இங்கு ஒரு சில மின் விசிறிகளாவது வாங்கிக் கொடு. உணவுப் பொருள்களைக் காப்பதற்கு ஒரு 'பிரிட்ஜ்' வாங்கிவை. நான் பல நாட்கள், இரவில், பசியோடு உறங்கியிருக்கிறேன்" என்று கூறினார்.

இதைக் கேட்ட மகனுக்கு ‘சுரீர்’ என்று உள்ளத்தில் வலித்தது. "அம்மா, இத்தனை மாதங்கள் இங்கே இருந்தீர்கள். அப்போதெல்லாம் இவற்றைக் கேட்காமல், இப்போது கேட்கிறீர்களே. ஏன்?" என்று மகன் கேட்டார். அதற்கு அந்த அன்னை, "மகனே, இந்த வெப்பத்தை, பசியை நான் பொறுத்துக்கொள்வேன். எனக்கு அது பழக்கமாகிவிட்டது. ஆனால், உன் பிள்ளைகள் உன்னை இங்கு வந்து சேர்க்கும்போது, உன்னால் இவற்றையெல்லாம் தாங்கமுடியாது என்று தெரியும். உனக்கு இவை தேவைப்படும் என்றுதான் உன்னிடம் இதைக் கூறுகிறேன்" என்று அமைதியாகக் கூறினார்.

மரணப்படுக்கையிலும் மகனின் தேவைகளை நிறைவுசெய்ய விழைவது, தாயின் உள்ளமே!

20 October 2020, 14:32