தேடுதல்

இந்தியாவில் அருள்பணி சுவாமி அவர்கள் விடுதலை செய்யப்பட... இந்தியாவில் அருள்பணி சுவாமி அவர்கள் விடுதலை செய்யப்பட...  

விதையாகும் கதைகள்: அவசரத் தீர்ப்பு, தீர்ப்பிட்டவருக்கே...

எவரும் யாரையும் அவசரப்பட்டு தீர்ப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில் அந்த தீர்ப்பு, தீர்ப்பிட்டவரையே திருப்பிச் சுட்டுவிடும்.

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருசமயம், மிகவும் புகழ்பெற்றிருந்த தத்துவ ஞானி ஒருவர், முல்லாவைச் சந்திக்க விரும்பினார். முல்லா அவர்கள்  குறிப்பிட்டிருந்த நேரத்தில், முல்லாவின் வீட்டுக்குச் சென்றார், அந்த ஞானி. ஆனால் தவிர்க்க முடியாத ஓர் அலுவல் காரணமாக, அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய்விட்டது. தன்னை வரச்சொல்லிவிட்டு முல்லா வீட்டில் இல்லாமல் போனது, வேண்டுமென்றே தன்னை இழிவுபடுத்த அவர் போட்ட திட்டம் என்று தவறாகக் கருதி, கடுங்கோபம் கொண்ட அந்த ஞானி, ஒரு சுண்ணாம்புக் கட்டியை எடுத்து, முல்லாவின் வீட்டுக் கதவில் “நீ ஒரு முட்டாள் கழுதை” என்று எழுதிவிட்டுச் சென்றார். சிறிதுநேரம் சென்று வீடு திரும்பிய முல்லா, தன் வீட்டுக் கதவில் எழுதப்பட்டிருந்த சொல்லைப் பார்த்துவிட்டு அவர் தன் மனைவியிடம் விசாரித்தார். மனைவியும், நடந்த நிகழ்ச்சியை அவரிடம் விளக்கிச் சொன்னார். உடனே முல்லா, அந்த ஞானியின் வீட்டிற்குச் சென்றார். முல்லாவைக் கண்டதும் தத்துவ ஞானியை அச்சம் ஆட்கொண்டது. ஆனால் முல்லாவோ, ஞானியைப் பணிவுடன் வணங்கி "அறிஞர் பெருமானே, என் வீட்டுக் கதவில் தங்கள் பெயரை தாங்கள் எழுதிவிட்டு வந்திருப்பதைக் கண்டு, தாங்கள் வந்துசென்ற விடயத்தை அறிந்துகொண்டேன். மன்னிக்க வேண்டும், எதிர்பாராத அலுவல் காரணமாக, தாங்கள் வந்த நேரம் வீட்டில் இருக்க முடியாமல் போய்விட்டது" என்றார். தன்னையே முட்டாள் கழுதை ஆக்கிவிட்ட முல்லாவின் அறிவுத் திறமையைக் கண்டு, அந்த ஞானி வாயடைத்து நின்றார். ஆம். எவரும் யாரையும் அவசரப்பட்டு தீர்ப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில் அந்த தீர்ப்பு, தீர்ப்பிட்டவரையே திருப்பிச் சுட்டுவிடும்.

14 October 2020, 14:36