தேடுதல்

உடைமையாளருடன் கால்நடைகள் உடைமையாளருடன் கால்நடைகள்  (AFP or licensors)

விதையாகும் கதைகள் : இது என்னுடையது

எவற்றையெல்லாம், ‘இது என்னுடையது’ என்று பிணைக்கிறோமோ, உண்மையில், அவற்றுடன், நாம்தான் பிணைக்கப்பட்டுள்ளோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஞானி ஒருவர் தெருவில் நடந்துசென்றார். எதிரே, ஒரு விவசாயி, தன் பசுவை, கயிற்றால் கட்டி, அழைத்துவந்தார். ஞானி, அந்த விவசாயியிடம், “நீ பசுவுடன் வருகிறாயா? பசு உன்னுடன் வருகிறதா?” என்று கேட்டார். குழம்பிப்போன விவசாயி, “இது என்ன, பைத்தியக்காரத்தனமான கேள்வி! பசுதான் என்னோடு வருகிறது” என்று கூறினார்.

உடனே ஞானி, “அப்படியானால் கயிறு எதற்கு? விட்டுவிடு!” என்றார். “கயிற்றை விட்டால், பசு ஓடிவிடுமே?” என்றார் விவசாயி. “அப்படியானால் அதுதான் உன்னைப் பிணைத்துள்ளது. நீ அதைப் பிணைக்கவில்லை” என்றார் ஞானி. விவசாயிக்கு அவர் சொன்னது புரியவில்லை.

ஞானி அவரிடம், “பசு உன்னுடன் வருகிறது என்றால், நீ கட்டை அவிழ்த்துவிட்டாலும், அது உன்னுடன் வர வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. கட்டை அவிழ்த்தால், அது ஓடிவிடும். அது ஓடினால், அதைத் துரத்திக்கொண்டு நீ ஓடுவாய். ஆனால், நீ ஓடினால், பசு உன்னை விரட்டிக்கொண்டு வராது. உண்மையில், அதனுடன் நீதான் கட்டப்பட்டுள்ளாய்” என்றார்.

உண்மைதான். எவற்றையெல்லாம் ‘இது என்னுடையது’ என்று பிணைக்கிறோமோ, உண்மையில் அவற்றுடன் நாம்தான் பிணைக்கப்பட்டுள்ளோம். எவை வேண்டுமோ, அவற்றை நாம்தான் பாதுகாக்கிறோம்.

07 October 2020, 15:21