தேடுதல்

சாலையோரத்தில் இரந்துண்பவர் ஒருவர் சாலையோரத்தில் இரந்துண்பவர் ஒருவர்  (AFP or licensors)

விதையாகும் கதைகள் : நிரம்பாத பாத்திரம்

ஒருவரின் அமைதி இன்னொருவரால் கெடக்கூடிய நிலையில் இருந்தால், அது அமைதியே அல்ல

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு மன்னர் நகர்வலம் சென்ற வேளையில், இரந்துண்பவர் ஒருவர் எதிரில் வந்து “பிச்சை கொடுங்க!” என்று கேட்டார். “என்னுடைய அமைதியைக் கெடுக்காதே போ”, என்றார் மன்னர். இரந்துண்பவர் சிரித்தபடியே, “அரசே உங்கள் அமைதி கெடக்கூடிய நிலையில் இருந்தால், அது அமைதியே இல்லை!” என்றார்.

தன்னெதிரில் நிற்பது வெறும் இரந்துண்பவர் இல்லை, அவர் ஒரு யோகி என்று தெரிந்துகொண்டார் அரசர். “துறவியே, உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் கேளுங்கள். நான் தருகிறேன்” என்றார் மன்னர்.

மறுபடியும் அந்தத் துறவி சிரித்தார். “அரசே உங்களால் முடியாததெல்லாம் கொடுக்க முடியும் என்று சத்தியம் செய்யாதீர்கள்” என்றார் துறவி.

‘இவர் என்ன இப்படி சொல்கிறார்?’ என்ற எண்ணியபடி, நகர்வலத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார் மன்னர். அரண்மனைக்குச் சென்ற துறவி தன்னிடம் இருந்த பிச்சைப் பாத்திரத்தை நீட்டி, “எனக்கு இது நிறைய பொற்காசுகள் வேண்டும்”, என்று சொன்னார்.

“இவ்வளவுதானா?” என்று ஏளனமாகக் கூறிய அரசர், ஒரு பெரிய தாம்பாளம் நிறையப் பொற்காசுகள் வரச்செய்து பிச்சைப் பாத்திரத்தில் போடச் செய்தார். பொற்காசுகள் போடப் போட அப்பாத்திரம் உள்வாங்கிக் கொண்டே இருந்தது. அரசக் கருவூலமேக் காலியானது. ஆனால் பிச்சைப் பாத்திரம் இன்னும் காலியாகவே இருந்தது.

அதனைக் கண்ட மன்னர், துறவியின் காலில் விழுந்து, “என்னால் இதை நிரப்ப இயலவில்லை, என்னை மன்னியுங்கள்” என்றார். அப்போது அந்தத் துறவி, “மன்னா, இந்தப் பிச்சைப் பாத்திரத்தை உங்களால் மட்டுமல்ல, வேறு எவராலும் நிரப்ப முடியாது. ஏனென்றால், இது, பேராசையால் இறந்து போன ஒருவரின் மண்டை ஓடு”, என்று சொன்னார்.

14 October 2020, 12:24