தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலபாமாவில் உள்ள 'வாழ்க மரியே'  சிறு கோவில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலபாமாவில் உள்ள 'வாழ்க மரியே' சிறு கோவில்  (AFP or licensors)

விதையாகும் கதைகள் : கடவுளைத் தேடி

குதிரை மீது அமர்ந்தபடியே அக்குதிரையைத் தேடுவதைப் போன்றதுதான், உள்ளுக்குள்ளேயே இருக்கும் கடவுளைத்தேடி மலை மலையாய் அலைவது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

ஓர் ஊரில், சிலர், கடவுளைத் தேடிப் புறப்பட்டனர். அந்த ஊர் மக்களும் அவர்களை வழியனுப்பி வைத்தனர். வெளியூர் சென்றிருந்த அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர், அவ்வேளையில், ஊர் திரும்பினார். சிலர் கடவுளைத் தேடிச்சென்றிருப்பதை அறிந்தார். குதிரையில் அமர்ந்த அவர், அவர்கள் சென்ற திசையை நோக்கி வேகமாகச் சென்றார். சில மணிநேரத்தில் அவர்களைப் பிடித்தார்.

குதிரையிலிருந்து இறங்கிய அவர், "கடவுளைத் தேடிப் புறப்பட்டுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்" என்று வாழ்த்தினார். அவர், மீண்டும், குதிரையில் ஏறி அமர்ந்தார். அவர்கள் செல்லும் வழியிலேயே குதிரையை ஓட்டத் துவங்கினார். அவர், ஊர் திரும்பாமல், தங்களுக்கு முன்னால் செல்வதைக் கண்ட அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அவர்களில் ஒருவர், "பெரியவரே! ஊர் திரும்பாமல் எங்களுக்கு முன்னால் செல்கிறீரே?" என்று கேட்டார்.

"என் குதிரையைத் தேடிவந்தேன். வழியில் உங்களைப் பார்த்து வாழ்த்தினேன். மீண்டும் குதிரையைத் தேடிப் புறப்பட்டுவிட்டேன். குதிரையைக் கண்டுபிடித்த பின்பே ஊர் திரும்புவேன். குதிரை கிடைக்காமல் ஊர் திரும்பமாட்டேன்" என்றார். இதைக் கேட்ட அவர்கள், "குதிரை மீது அமர்ந்தபடியே குதிரையைத் தேடுகிறாரே, இவரைப் போல் முட்டாள் யார் இருக்க முடியும்" என்று எண்ணிச் சிரித்தார்கள். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் அவர்.

"குதிரையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். உம் கண்ணெதிரிலேயே குதிரை இருக்கிறது. அப்படியிருக்க, குதிரையைத் தேடிப்போவதாகச் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது?", என்றார், அவர்களில் ஒருவர். "நீங்கள் கடவுளைத் தேடிச்செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் கடவுளை, தேடி அலைகிறீர்கள். நான் உங்களைப் பார்த்துச் சிரித்தேனா?" என்று பதில் கேள்வி கேட்டார், ஊர்ப் பெரியவர்.

அவர்களுக்கு உண்மை புரிந்தது. அவருடன் சேர்ந்து ஊர் திரும்பினார்கள்.

24 October 2020, 14:42