தேடுதல்

நேபாளத்தில் புதுப்பிக்கப்படும் கோவில் நேபாளத்தில் புதுப்பிக்கப்படும் கோவில் 

விதையாகும் கதைகள் : பாட்டால் திறந்து மூடிய கதவு

என்னுடைய ஒரு பாட்டே இறைவனைச் சலிப்படைய வைத்துவிட்டது. எனவேதான், என் ஒரே பாட்டில் கதவைத் திறந்து விட்டான்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

வேதாரண்யத்தில் ஒரு கோவில் கதவு என்ன காரணத்தினாலோ மூடியே இருந்தது. யாராலும் அந்தக் கதவைத் திறக்க முடியவில்லை.

அவ்வூருக்கு சம்பந்தரும் திருநாவுக்கரசரும் வந்தனர். கதவு திறக்கவேண்டும் என, சம்பந்தர் ஒரு பாட்டைப் பாடினார். உடனே கதவு திறந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டனர்.

எல்லாரும் வெளியே வந்தபின் திறந்த கதவை மூட முயற்சித்தபோது, அதை அடைக்க இயலவில்லை. அப்போது கதவை மூடவேண்டி திருநாவுக்கரசர் பாட ஆரம்பித்தார். ஒன்று, இரண்டு, என வரிசையாகப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். பதினோரு பாடல்கள் பாடி முடிந்தவுடன் கதவு தானே மூடிக்கொண்டது.

திருநாவுக்கரசர், சம்பந்தரிடம், “நீங்கள் பாடிய ஒரே பாட்டில் கோவிலின் கதவு திறந்தது. கதவை மூட எனக்கோப் பதினோரு பாடல்கள் பாடவேண்டி வந்தது. தங்கள் மகிமையின் முன், நான் சிறியவன் என்பதை, இறைவன் இதன் மூலம் எனக்கு உணர்த்திவிட்டான்” என்றார்.

உடனே சம்பந்தர், “நாவுக்கரசரே, தாங்கள் நினைப்பது தவறு. என்னுடைய ஒரு பாட்டே இறைவனைச் சலிப்படைய வைத்துவிட்டது. எனவேதான், என் ஒரே பாட்டில் கதவைத் திறந்து விட்டான். ஆனால், உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய்த் தித்திக்கவே, இறைவன் மெய் மறந்து, உங்களைத் தொடர்ந்து பாட வைத்திருக்கிறான்” என்றார்.

02 October 2020, 13:59