தேடுதல்

Vatican News
பழ விற்பனை பழ விற்பனை  (AFP or licensors)

விதையாகும் கதைகள் : சில பழங்களா, நற்பெயரா?

எனக்குத்தெரியாமல் சில பழங்களைத் திருடுவது பெரிதல்ல, அதற்கு பின்வரும் விளைவுகளை யோசித்தீர்களா?, எனக் கேட்டார் பழ வியாபாரி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

சிறுவன் ஒருவன், ஒரு கூடையில், நாவல் பழங்களை வைத்து, தெருவில் விற்றுக்கொண்டு வந்தான். ஒரு பெண் அவனை அழைக்கவும், அவரின் வீட்டிற்கு வந்து கூடையை இறக்கினான். அந்தப்பெண், “நான் கூடையை வீட்டிற்குள் எடுத்துச்சென்று, நல்ல பழங்களைப் பொறுக்கி எடுத்துக்கொள்ளவா?” என்று கேட்டார். சிறுவனும் சம்மதிக்கவே, அவர், கூடையை வீட்டினுள் எடுத்துச்சென்று நல்ல பழங்களாகப் பார்த்துப் பொறுக்கி எடுத்தார். பையன் வீட்டிற்குள் செல்லவில்லை. வெளியே இருந்த மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் வெளியே வந்து கூடையை அவனிடம் கொடுத்து விட்டு, தான் எடுத்த பழங்களுக்கு விலை கேட்டார். அவனும் எடை போட்டு விலை சொன்னான்.

பணத்தைக் கொடுத்த அந்தப் பெண், “ஏன் தம்பி, நான் உள்ளேக் கூடையை எடுத்துச் சென்றபோது நீ உள்ளே வரவில்லை. நான் அதிகமாகப் பழங்களை எடுத்திருந்தால் என்ன செய்வாய்? உனக்கு நஷ்டம் ஆகாதா? நான் உன்னை ஏமாற்றமாட்டேன் என்று, உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

அதற்குச் சிறுவன், “அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே. ஆனால், உங்களுக்கு, திருடி என்ற பட்டம் கிடைக்குமே. அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா? சில பழங்களைத் திருடுவதா, நற்பெயரை தக்கவைப்பதா, எது முக்கியம்?” என்று கேட்டான்.

அந்தப் பெண் வாயடைத்துப்போய் நின்றார்.

17 October 2020, 18:38