தேடுதல்

சமையலறையில் .......... சமையலறையில் ..........  (AFP or licensors)

விதையாகும் கதைகள் : கடமையைச் செய், பலனை எதிர்பாராதே

பலனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டால், நம்மால் அந்தச் செயலில் நிச்சயம் வெற்றி பெற இயலாது. சரியாகச் செய்தால், அதற்கான பலன் நமக்குக் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

மன்னர் ஒருவர் முனிவரிடம், “கீதையிலே, 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே' என்று கூறப்பட்டுள்ளது. நல்ல முறையில் ஆட்சி செய்யவேண்டியது என் கடமை. அதனை மக்கள் பாராட்டவேண்டும் என்று நினைப்பது தவறா?” என்று கேட்டார்.

முனிவர் அதற்கு, “உன் கேள்விக்குப் பதில் சொல்ல, நீ ஒரு வாரம் என் ஆசிரமத்தில் சாப்பிட வேண்டும்” என்றார்.

மன்னரும் அவ்வாறே அங்கு சாப்பிட்டு வந்தார். சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது. அதை இரசித்து அவர்  சாப்பிட்டார்.

ஒரு வாரம் முடிந்தவுடன் முனிவர் கேட்டார், “இங்கு சாப்பாடு எப்படி இருந்தது?”

மன்னரோ, “நானே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது. இதைச் சமைத்த சமையல்காரரை என் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, தலைமைச் சமையல்காரராக நியமிக்கப்போகிறேன்'' என்றார்.

முனிவர் சொன்னார், “சுவையாக சமைக்க வேண்டியது, ஒரு சமையல்காரரின் கடமை. இந்தச் சமையல்காரர் தன் கடமையைச் செய்தார். இப்போது அவருக்கு அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது. கடமையைச் சரியாக செய்தவருக்கு அதற்கான பலன் கண்டிப்பாகத் தேடிவரும்”

ஆம். ஆசையின் அடுத்த நிலைதான் எதிர்பார்ப்பு. ஆசைக்கு அளவில்லை. பலனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டால், நம்மால் அந்தச் செயலில் நிச்சயம் வெற்றிபெற இயலாது. சரியாகச் செய்தால் அதற்கான பலன் நமக்குக் கிடைப்பதை, யாராலும் தடுக்க முடியாது.

21 October 2020, 14:40