தேடுதல்

கல்லறைத் தோட்டம்  ஒன்றில் கல்லறைத் தோட்டம் ஒன்றில்  (ANSA)

விதையாகும் கதைகள் : இறப்பு என்பது இயற்கை

இளமையிலிருந்து முதுமை அடைவதுபோல், உடல் நலத்துடன் இருப்பவர், நோயுறுவதுபோல், இறப்பதும் இயற்கையில் நிகழும் ஒரு செயல்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு பெண், தன் கணவர் மீது உயிரையே வைத்திருந்தார். திடீரென ஒரு நாள் கணவர் இறந்து விட, மனைவியால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவர் ஞானி ஒருவரிடம் சென்று, தன் கணவனுக்கு மீண்டும் உயிர் அளிக்க வேண்டினார்.

“பிறந்த ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும், அவர்களை உயிர்ப்பிக்க வழி ஏதும் இல்லை என்று அவர் அந்தப் பெண்ணிடம் தெளிவாகச் சொன்னபோதிலும் அவர் மீண்டும் தான் சொன்னதையே கூறிக் கொண்டிருந்தார்.

ஞானி அந்த பெண்ணிடம், ''சரி,உனக்கு எந்தக் கணவனை உயிர்ப்பித்துத் தர வேண்டும்?'' என்று கேட்டார். கணவன் இறந்த அதிர்ச்சியை விட, இந்தக் கேள்வி அவருக்கு அதிக அதிர்ச்சியைத் தந்தது. அவருக்குக் கோபமும் வந்தது.

ஞானி.அவரிடம் அமைதியாக, ''அம்மா, நான் கேட்டதை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உன்னைத் திருமணம் செய்து கொள்ளுமுன் இருந்தானே அவனையா?, திருமணம் செய்து கொண்ட பின் இருந்தானே அவனையா?, இளைஞனாக இருந்தானே அவனையா?, முதியவன் ஆனானே அவனையா?, ஆரோக்கியத்துடன் இருந்தானே அவனையா?, நோயுற்று இறக்கும் நிலையில் இருந்தானே அவனையா?, யாரை உயிர் பிழைக்க வைக்க வேண்டும்? சொல்” என்று கேட்டார். அந்தப் பெண்ணுக்கு ஏதோ புரிவது போலத் தெரிந்தது.

ஞானி மீண்டும் சொன்னார்: ''இளைஞனாய் இருந்த அவன் எப்படி முதியவன் ஆனானோ, உடல் நலத்துடன் இருந்தவன், எப்படி நோயுற்றானோ, அதுபோலவே, அவன் இறந்ததும் ஓர் இயற்கையான செயல். எனவே, நீ கவலையை மறந்து வீட்டுக்குப் போ''

28 October 2020, 15:39