தேடுதல்

Vatican News
காலநிலை மாற்ற விளைவுகள் அல்ல, காரணங்கள் காலநிலை மாற்ற விளைவுகள் அல்ல, காரணங்கள்   (ANSA)

கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு ஜப்பான் உறுதி

உலகின் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் அமைந்துள்ள ஜப்பான், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு, தெளிவான கொள்கைகளை அறிவிக்கும் – ஐ.நா. பொதுச் செயலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அழிவுகள், மற்றும், வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவற்றைக் குறைப்பதற்கு உலக அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்துவரும் ஜப்பான் நாடு, 2050ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக குறைப்பதற்கு உறுதி வழங்கியுள்ளது.  

அக்டோபர் 26, இத்திங்களன்று ஜப்பான் பிரதமர் Suga Yoshihide அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், தான் மிகவும் ஊக்கமடைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாடு, 2050ம் ஆண்டுக்குள், கார்பன் வெளியேற்றத்தை முழுவதுமாக குறைப்பதற்கு, தன்னிடமுள்ள அனைத்து தொழில்நுட்பத்தையும், நிதியையும் பயன்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலகின் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் அமைந்துள்ள ஜப்பான், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு, தெளிவான கொள்கைகளை அறிவிக்கும் எனவும், இதன் வழியாக, இந்நாடு, ஐ.நா.வின் மற்ற உறுப்பு நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று தான் நம்புவதாகவும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டு நவம்பரில், கிளாஸ்கோ நகரில், காலநிலை மாற்றம் பற்றிய ஐ.நா.வின் 26வது உலக மாநாடு (COP26) நடைபெறவிருப்பதையும் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், 2050ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு, நாடுகள் தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்று, இரு வாரங்களுக்குமுன் தான் மீண்டும் அழைப்பு விடுத்திருப்பதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளும், 2050ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை, முற்றிலும் குறைப்பதற்கு முயற்சித்து வருகின்றன என்று செய்திகள் கூறுகின்றன.   

27 October 2020, 15:33