தேடுதல்

அமைதிப் புறா அமைதிப் புறா 

வாரம் ஓர் அலசல்: அனைவரும் ஒன்றாக அமைதியை வடிவமைக்க...

பன்மைத்தன்மை கொண்ட உலகளாவிய சமுதாயத்தில், பன்மைத்தன்மையை மதிக்கச் செய்வது அமைதி. இது, மனித மாண்பிற்கு உறுதியளிக்கிறது. போர்களின்றி இருப்பது அமைதி அல்ல, மாறாக, நீதி மேலோங்கி இருப்பதே அமைதியாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடக்குப் பகுதியில், ஒரு சிறிய பண்ணை வீட்டில் வாழ்ந்துவந்த பண்ணை விவசாயி ஒருவர், பல ஆண்டுகளாக, கைக்கடிகாரம் ஒன்றை தன் கையில் கட்டியிருந்தார். அவரைப் பொருத்தவரை, அது வெறும் கைக்கடிகாரம் அல்ல. நல்ல பல வாய்ப்புக்கள், நல்ல பல தருணங்கள், விடயங்கள், வெற்றிகள் போன்றவை, அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம்தான் காரணம் என்கிற நம்பிக்கை, அவருக்கு இருந்தது. ஒரு நாள், அவர், தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைக் காணவில்லை என்று, பண்ணை வேலையெல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார். உடனே பரபரப்பாகி, அவர் தன் வேளாண் கிடங்குக்குள் போய், அதைத் தேடினார். எவ்வளவு நேரம் தேடியும் அது கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்த அவர், தனது கிடங்குக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சில சிறாரைக் கவனித்தார். அவர்களை அவர் அழைத்து, செல்லங்களா, இந்தக் கிடங்குக்குள் என் கடிகாரம் காணாமல் போய்விட்டது. அதைக் கண்டுபிடித்துக் கொடுக்கிறவர்களுக்கு அருமையான பரிசு ஒன்று தருவேன்” என்று சொன்னார். சிறாரும் துள்ளிக்குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள். அத்தனை பேரும் உள்ளே இருந்த வைக்கோல்போர், புல், பூண்டு போன்ற எல்லாவற்றிலும் தேடினார்கள், அது கிடைக்கவில்லை. அவர்கள், சோர்ந்துபோய்  வெளியே வந்து, பண்ணையாளரிடம், “மன்னிச்சுக்கங்க ஐயா, எங்களால கண்டுபிடிக்க முடியலை’’ என்றார்கள். அந்த நேரத்தில், அச்சிறாரில் ஒருவன், தயங்கித் தயங்கி அவரருகே வந்து, “ஐயா, எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்புத் தருவீர்களா, நான் அந்த கைக்கடிகாரம் கிடைக்கிறதா என்று முயற்சி செய்து பார்க்கிறேன்’’ என்று கேட்டான். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டார். கிடங்குக்குள் நுழைந்த அந்தச் சிறுவன் கதவைச் சாத்திக்கொண்டான். ஏறத்தாழ பதினைந்து நிமிடங்களில், அவன் கதவைத் திறந்துகொண்டு, கையில் கைக்கடிகாரத்துடன் வெளியே வந்தான். பண்ணையாருக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. “நீ மட்டும் எப்படி கண்ணா சரியா அதைக் கண்டுபிடித்தாய்?’’ என்று அவர் கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், “ஐயா... நான் உள்ளே போய் எதுவுமே செய்யவில்லை. கிடங்குக்கு நடுவில், கண்ணை மூடி, ஐந்து நிமிடம் உட்கார்ந்து காத்திருந்தேன். அந்த அமைதியில், கடிகாரத்தின் `டிக்...டிக்... டிக்...’ சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசைக்குப் போனேன். கண்டுபிடித்தேன். எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்’’ என்று, மிகச் சாதாரணமாகச் சொன்னான்.

இக்காலக்கட்டத்தில், மண்ணாசை, பொருளாசை, நாற்காலி ஆசை... இவ்வாறு பல்வேறு பேராசைகளின் காரணமாக, தனி மனிதரும், நாடாளும் அரசியல் தலைவர்களும், தங்களையே துன்புறுத்திக்கொண்டு, மற்றவரையும் துன்புறுத்துகிறார்கள். இதற்கெல்லாம் காரணம், மனதில் அமைதி இல்லாமை. தனி மனிதரின் உள்ளாழத்தில் அமைதி கிட்டினால், அந்த அமைதி அலைகள், பிரபஞ்சத்திலும் பரவி, உலகில் அமைதி நிலவ உதவும். “மோனத்திலே அன்னதானத்திலே சிறந்தநாடு” என்று, பாரதத்தைப் பாடினார் பாரதி. அக்காலத்தில், தருமபுரத்தில் புலியும், பசுவும் ஒன்றாக நின்று நீர் அருந்துமாம். சிராப்பள்ளியில் பசுவும், புலியும் ஒன்றாக விளையாடுமாம். காரணம், அந்த ஊர்களில் மன அமைதியுடன் தவம் செய்வோர் நிறைந்திருந்தனர் என்று சொல்லப்படுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்று, கணியன் பூங்குன்றனார் என்ற தமிழ் புலவர், இரண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலக அமைதிக்கு வித்து ஊன்றினார். தாயுமானவர், எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யானறியேன் பராபரமே என்று, உயிர்களை அன்புகூர்வதால் மலரும் உன்னத உலகுக்கு வழி காட்டினார். மகாத்மா காந்தி அவர்கள், “ஒடுக்கப்பட்ட சமுதாயம் ஒன்றில் சமுதாய நீதி இல்லாமல் இருக்கும்வரை, அங்கே அமைதி இருப்பதாக கூற முடியாது” என்று சொன்னார். வன்முறையற்ற வழியை உலகிற்கு எடுத்துரைத்த பாரதமே இன்று வன்முறையின்றி வாழ்கின்றது என்று, நம்மால் துணிந்து சொல்ல முடியாது.

உலக அமைதி நாள்

இன்று உலகில் குறைந்தது ஏதாவது ஓரிடத்தில் போர் இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது. மனிதர் ஒருவரை ஒருவர் கொலைசெய்வதற்கு மிகத் திறமையான வழிகளை வளர்த்துவருவது, போர்களை அதிகரித்து, மேலும் மேலும் அழிவுகளைக் கொணர்கின்றது. இரண்டாம் உலகப் போரில், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதிகளில், அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான் மீது,  இரு அணுகுண்டுகளைப் போட்டது. இது நடந்து 75 ஆண்டுகள் ஆகியும், இன்றும் நாடுகளில், அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன. அதற்குப்பின் உலகில் அணுகுண்டுகள் போர்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தபோதிலும், 1945ம் ஆண்டிலிருந்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் போர்களிலும், பயங்கரவாதத் தாக்குதல்களிலும் உயிரிழந்துள்ளனர். மனித இனம், போரிடும் இனமாக ஏன் செயல்படுகின்றது? உலகில் பல்வேறு பகுதிகளில் துண்டு துண்டாய் இடம்பெற்றுவரும் போர்களுக்குக் காரணம் என்ன? இத்தகைய ஒரு சூழலில் அமைதியைக் கொணர இயலுமா என்பதே, இன்று பலரின் ஆதங்கம். சமய சகிப்பற்றதன்மை, இனவெறி, நிறவெறி, கலாச்சாரப் புறக்கணிப்பு, கம்யூனிசம், முதலாளித்துவம் போன்ற கருத்தியல் வேறுபாடு, தேசியவாதம், பொருளாதார நிலைகள், உறுதியான இராணுவ அமைப்பைக் கொண்ட அரசமைப்பு ஏற்கும் பொதுவான போக்கு. இவை போன்றவற்றால் இக்காலக்கட்டத்தில் போர்கள் இடம்பெறுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றிற்கு மத்தியிலும், அமைதி இயலக்கூடியதே என்று, பலர் நம்பிக்கை விதைகளை விதைத்து வருகின்றனர்.  

நாடுகள் மற்றும், மக்கள் மத்தியில், அமைதி பற்றிய கருத்தியல்களை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 1981ம் ஆண்டு உலக அமைதி நாளை உருவாக்கியது. இந்த நாள் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் என்றும், அந்த அவை கூறியது. பின்னர் 2001ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்ட செப்டம்பர் 21ம் தேதிக்கு,  அந்த அவை, உலக அமைதி நாளை, மாற்றி அமைத்தது. வன்முறையற்றநிலை, மற்றும், போர் நிறுத்தம் ஆகியவற்றை 24 மணி நேரமும் கடைப்பிடிப்பதன் வழியாகவும் இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 21, இத்திங்களன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம், “அனைவரும் ஒன்றாக அமைதியை வடிவமைக்க” என்ற தலைப்பில், உலக அமைதி நாளை சிறப்பித்தது. இதே நாளில், ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவும் சிறப்பிக்கப்பட்டது. ஐ.நா. தலைமை பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா. தலைமையகத்திலுள்ள அமைதி மணியை ஒலிக்கச்செய்து இந்த அமைதி நாள் நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.

மேலும், கோவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்கு மத்தியிலும், “வருங்காலத்தை ஒன்றிணைந்து வடிவமைப்போம், உலகத்திற்கு ஒருமைப்பாட்டுணர்வு அவசியம், நமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனம்” என்ற தலைப்பில், செப்டம்பர் 21, இத்திங்களன்று நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், உயர்மட்ட கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இப்போதைய கொள்ளைநோய் நெருக்கடி சூழலில், உலகைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நாடுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து செயலாற்றவேண்டும் என்பதே, 75ம் ஆண்டு நிறைவு நாளில் அதிகம் வலியுறுத்தப்பட்டது. பன்மைத்தன்மை கொண்ட உலகளாவிய சமுதாயத்தில், பன்மைத்தன்மையை மதிக்கச் செய்வது அமைதி. இது, மனித மாண்பிற்கு உறுதியளிக்கிறது. போர்களின்றி இருப்பது அமைதி அல்ல, மாறாக, நீதி மேலோங்கி இருப்பதே அமைதியாகும் என்றும் கூறப்பட்டது. உலகில் அமைதியை நிலவச் செய்வது பற்றிக் கூறிய ஜோ வாசர்மேன் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒத்துழைத்தால், இந்த உலகில் அமைதி இயலக்கூடியதே கூறியுள்ளார். உலக சமுதாயத்திற்கு, குறிப்பாக, கொரோனா கொள்ளைநோய் நெருக்கடிகள் உருவாக்கியுள்ள சமுதாய, பொருளாதார, மற்றும், அரசியல் பிரச்சனைகளைக் களைவதற்கு, இக்கால உலகிற்குத் தேவையானது, நாடுகளிடையே, ஒருமைப்பாடு, மற்றும், ஒன்றிணைந்து செயல்படுவதாகும்.

ஒற்றுமை காக்கையும், வௌவாலும்

ஒரு சமயம் காக்கையும், வௌவாலும், யார் அதிக உயரம் பறப்பது என்று தங்களுக்கு இடையே கடுமையாய்ச் சண்டையிட்டுக் கொண்டன. அதற்கு ஒரு தீர்வு கண்டே ஆகவேண்டும் என்ற வீராப்பில், அவையிரண்டும் கழுகரசனிடம் சென்று, எங்களில் அதிக உயரம் பறப்பது யார் என்று தீர்ப்புச் சொல்லுங்கள் என்று கேட்டன. அவையிரண்டும் போட்ட சண்டையில் கடுப்பாகிப்போன கழுகரசன், உங்களில் யார் வடிகட்டின அறிவிலியோ, அவனேதான் என்று சொன்னவுடன், அங்கே மயான அமைதி நிலவியது. ஆம். நீயா, நானா என்ற சகதிச் சிந்தனையைவிட, நீயும் நானும் என்ற, சார்பு சிந்தனையே சாலச் சிறந்தது (பேராசிரியர் அருள்பணி சேவியர் அந்தோனி சே.ச.).

கோவிட்-19 கொள்ளைநோய் சூழலில், உலகினருக்குத் தேவைப்படுவது, நீயா, நானா என்ற தலைக்கன மனப்பான்மை அல்ல, மாறாக, நீயும் நானும் என்ற ஒற்றுமை, ஒருமைப்பாட்டு உணர்வே. ஐக்கிய நாடுகள் நிறுவனமும், இந்த ஒற்றுமையே, ஒருமைப்பாடே இக்காலத்திற்கு இன்றியமையாதது என்ற அறைகூவலுடன், செப்டம்பர் 21 இத்திங்களன்று தனது 75வது ஆண்டு நிறைவைச் சிறப்பித்தது. ஒற்றுமை யென்றொரு கயிறு, அதனை ஒற்றையாய்ப் பிடிப்பது தவறு, கற்றவர் கல்லாதோர், ஏழை செல்வந்தர் எல்லாரும் முயன்று இணைந்தால் உயர்வு. பசுக்களின் சாந்தத் தன்மைகூட, மந்தையில் கலந்தால் புலியையே விரட்டும். ஆனால் தனிப்பட்டுப் போன பசுவை, குட்டிப் புலியும் துணிந்து தாக்கும். இலகுவாய் உடைபடும் குச்சிகூட இறுக்கிய கட்டுக்குள் கடினம் கூடும். அதனை உடைக்க முயலும் கைகளும் தோற்றுப்போகும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே. நமக்குள் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.

21 September 2020, 14:35