தேடுதல்

கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி  

கொரோனாவால் 87,20,00000 மாணவர்கள் கல்வி மறுப்பு

கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து 40 நாடுகளில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளைநோய் பரவத் துவங்கிய கடந்த  9 மாதங்களாக, 51 நாடுகளில், 87 கோடியே 20 இலட்சம் மாணவர்கள், தங்கள் வகுப்புகளுக்கு திரும்ப முடியாத நிலை இருந்து வருவதாக யுனிசெப் அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.

இப்புள்ளிவிவரத்தை வெளியிட்ட ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதி அமைப்பான யுனிசெப் தலைமை இயக்குனர் Henrietta Fore அவர்கள், கொரோனா கொள்ளைநோய் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், 192 நாடுகளில் 160 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்குச் செல்லமுடியாமல் வீட்டில் அடைபட்டுக்கிடந்தனர் என கூறினார்.

இந்த 160 கோடி பேரில் பலர், கணனி தொலைதூரக்கல்வி வழியாக பயன்பெற முடிந்துள்ள போதிலும், ஏறத்தாழ 46 கோடியே 30 இலட்சம் சிறார்களுக்கு இந்த வசதி எதுவும் இல்லை என மேலும் கூறியுள்ளது, யூனிசெப்பின் அறிக்கை.

கல்விக்கூடங்களை மீண்டும் திறப்பது குறித்து 158 நாடுகளில் யுனிசெப் நடத்திய ஆய்வில், 40 நாடுகளில் பள்ளிகளைத் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார் யுனிசெப் தலைமை இயக்குனர்.

கல்விக்கூடங்கள் மூடியுள்ளதால், குழந்தைகளின் கல்வியறிவை மட்டுமல்ல, கல்விக்கூடங்கள் வழியாக வழங்கப்படும் நல ஆதரவு, சத்துணவு, பாதுகாப்பான சுற்றுச்சூழல் போன்றவற்றையும் அவர்கள் இழந்துள்ளதாக, தலைமை இயக்குனர் Fore அவர்கள் தெரிவித்தார்.

குழந்தைகளின் கல்வி தொடர்பான உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், வருங்காலத் தலைமுறை அதிகத் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என மேலும் தன் கவலையை வெளியிட்டார் தலைமை இயக்குனர் Fore.

17 September 2020, 13:18