தேடுதல்

ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் 

கோவிட் 19 கொள்ளைநோய் தடுப்பு மருந்து, அனைவருக்கும்...

நாடுகளின் எல்லைகளை மதிக்காத ஒரு கொள்ளைநோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகள், நாடுகளின் எல்லைகளைக் கடந்து, அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வதே சரியான பதிலிறுப்பு - ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 கொள்ளைநோய்க்கு எதிராக உருவாக்கப்படும் தடுப்பு மருந்து அனைவருக்கும், எல்லா நாடுகளிலும் கிடைக்கவேண்டும். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே, நாம் அனைவரும் பாதுகாப்புடன் வாழ முடியும் என்று ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

ஐ.நா. நிறுவனத்தின் 75ம் ஆண்டு நிறைவையொட்டி, நியூ யார்க் நகரில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் தலைமைச் செயலகத்தில், செப்டம்பர் 22, வருகிற செவ்வாயன்று, உயர்மட்ட கூட்டம் துவங்கவிருப்பதையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய கூட்டேரஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

உலகெங்கும் பரவியுள்ள இந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த நம்மால் இயலாததையடுத்து, பலியாகியிருப்போரின் எண்ணிக்கை, விரைவில் 10 இலட்சத்தை நெருங்கியிருக்கும் இவ்வேளையில், இந்த நோயின் விளைவுகளை தடுப்பு மருந்து மட்டும் தடுக்கப்போவதில்லை என்பதை கூட்டேரஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நாடுகளின் எல்லைகளை மதிக்காத ஒரு கொள்ளைநோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் நாடுகளின் எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது ஒன்றே இந்நோய்க்கு நாம் அளிக்கவேண்டிய சரியான பதிலிறுப்பு என்று கூட்டேரஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இந்த நோயைக் குறித்து, தவறான, அச்சமூட்டும் செய்திகளைப் பரப்பி மக்களை துன்புறுத்தியதுபோல் இனி நடவாமல் இருக்க, இந்த நோய் தடுப்பு மருந்து குறித்து உருவாகிவரும் தவறான செய்திகளை முளையிலேயே வெட்டியெறிய வேண்டும் என்று கூட்டேரஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

1945ம் ஆண்டு, இவ்வுலகில் உணரப்பட்ட பாதுகாப்பற்ற ஒரு சூழலின் காரணமாக உருவாக்கப்பட்ட ஐ.நா. நிறுவனம், மீண்டும் தன் 75வது ஆண்டு நிறைவில், பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வாழ்கிறது என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்ட தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், செப்டம்பர் 22ம் தேதி துவங்கும் உயர்மட்டக் கூட்டத்தில், உலகெங்கும் போர்நிறுத்தம் உருவாகத் தேவையான முயற்சிகள் முதலில் எடுக்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

17 September 2020, 13:26