தேடுதல்

கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை 

விதையாகும் கதைகள்: பொறுமைக்கு கிடைத்த வெகுமதி

வாய்ப்புக்கள் தவறிப்போனால், அதுகூட கடவுள் திட்டம் என்று கூறலாம். ஏனெனில் இதைவிட சிறந்த, நல்ல வாய்ப்பை வழங்க, கடவுளேகூட அதை தவிர்த்திருக்கலாம்”

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருமுறை கடவுள் கிராமம் ஒன்றிற்குச் சென்று, இன்று உங்கள் எல்லாருக்கும் சிறப்பான பழம் ஒன்று கொடுக்கப்போகிறேன் என்று சொன்னார். உடனே கிராம மக்கள் எல்லாரும் ஓடிவந்து வரிசையில் நின்றனர். அந்த வரிசையில் சிறுமி ஒருவரும் நின்று கொண்டிருந்தார். கடவுள் ஒவ்வொருவருக்காக பழத்தைக் கொடுத்துக்கொண்டே வந்தார். அந்த சிறுமியின் நேரம் வந்தது. கடவுள் சிறுமியின் கையில் பழத்தை வைத்தபோது அது உருண்டுபோய் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டது. இன்னொரு பழம் வாங்கவேண்டும் என்றால், மீண்டும் வரிசையில் போய்தான் நிற்கவேண்டும். அதுதான் அங்கு சொல்லப்பட்டது. சிறுமியும் எதுவும் பேசாமல் கவலையோடு பின்னால் போய் வரிசையில் காத்து நின்றார். சிறுமியின் நேரம் வந்தபோது, கடவுள் இரண்டு பழங்களை சிறுமியின் கையில் வைத்தார். அப்போது சிறுமியின் காதில் ஏதோ ஒரு சப்தம் கேட்டது. முதலில் உனது கையில் பழத்தை வைத்தபோது அதை தட்டிவிட்டது நான்தான், ஏனெனில் அது நல்ல பழம் இல்லை, அதைவிட சிறந்த பழத்தைப் பெறுவதற்கு நீ பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறாயா என்று கவனித்தேன். நீ அவ்வாறு காத்துக்கொண்டிருந்தாய், இந்தா சிறந்த பழங்கள் என்று கடவுள் சொன்னாராம். வாழ்க்கையில் அன்பையும் பொறுமையையும் கடைப்பிடித்தால், இயலாதது என்று எதுவுமே இல்லை. இந்தக் கதையைச் சொன்ன பட்டிமன்ற பேச்சாளர் அருள்பிரகாசம் அவர்கள், “கடவுள் என்னை அன்புகூர்கிறார் என்று சொல்கிறீர்கள், ஆனால் பலநேரங்களில் எனக்கு நிறைய வாய்ப்புக்கள் கைவிட்டுப் போகிறதே என்று நீங்கள் புலம்பலாம். ஆனால் வாய்ப்புக்கள் தவறிப்போனால், அதுகூட கடவுள் திட்டம் என்று நாம் கூறலாம். ஏனெனில் இதைவிட சிறந்த, நல்ல வாய்ப்பை வழங்க, கடவுளேகூட அதை தவிர்த்திருக்கலாம்” என்று சொல்கிறார். எனவே பொறுமை காத்து, நல்வாய்ப்புக்களை அள்ளிக்கொள்வோம்.

பொறுமை என்பது, வெறுமனே காத்திருப்பது அல்ல, மாறாக, காத்திருக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான். (அமெரிக்க எழுத்தாளர் Joyce Meyer)

21 September 2020, 14:19