தேடுதல்

வெளிச்சத்தை உணர கண்கள் வேண்டும் வெளிச்சத்தை உணர கண்கள் வேண்டும்  

விதையாகும் கதைகள் : அனுபவத்தால் உணர வேண்டியது

வெளிச்சத்தை தொட்டுப்பார்க்க வேண்டும். சுவைத்துப்பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ உணர வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

பார்வையற்ற இளைஞர் ஒருவரை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள், “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்பமறுக்கிறான்” என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞர், “வெளிச்சத்தை நான் தொட்டுப்பார்க்க வேண்டும். சுவைத்துப்பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்றார்.

அவருடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர். அதற்குப் புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை, அவனை நம்பவைக்கும் செயலை நான் செய்யமாட்டேன். இப்போது அவனுக்குத் தேவை, பார்வை. வெளிச்சம்பற்றிய விளக்கமல்ல. அவனுக்குப் பார்வை வந்துவிட்டால், விளக்கம் தேவைப்படாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச்சென்று பார்வை கிடைக்கச்செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.

புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை வழியாக அவருக்கு பார்வையும் கிடைத்தது. உடனே அந்த இளைஞர் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது”, என்று கூறினார். உடனே, புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறியபோது ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞர், “கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக்கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றார்.

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை, ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

27 September 2020, 10:31