தேடுதல்

Vatican News
புர்கினா பாசோ நாட்டில், போர்ச் சூழலில் வாழும் குழந்தைகள் புர்கினா பாசோ நாட்டில், போர்ச் சூழலில் வாழும் குழந்தைகள்  (AFP or licensors)

கல்வியைப் பாதுகாக்கும் உலக நாள், முதல்முறையாக...

கோவிட்-19ன் தாக்கத்திற்குப் பின், கல்விக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படும் இவ்வேளையில், கல்விக்கு எதிராக நிகழும் அனைத்துவிதமான தாக்குதல்களிலிருந்தும் சிறாரும், இளையோரும் காக்கப்படவேண்டும் - UNESCO நிறுவனம் அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகம் கோவிட் 19 கொள்ளைநோயுடன் போராடிவரும் இவ்வேளையில், ஆயுதம் தாங்கிய மோதல்கள் இடம்பெற்றுவரும் நாடுகளில் துன்புற்றுவரும் குழந்தைகளும் இளையோரும், இன்னும் கூடுதலாகத் தாக்கப்பட்டுவருகின்றனர் என்று ஐ.நா.நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வாண்டு, மே 25ம் தேதி நடைபெற்ற ஐ.நா. பொது அமர்வில், தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாக்கும் உலக நாள் என்ற கருத்தை, கட்டார் நாடும், அத்துடன் இணைந்து, 62 நாடுகளும் முன்மொழிய, பொது அமர்வில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளும் அதனை ஒருமனதோடு ஏற்றுக்கொண்டது குறித்து, கூட்டேரஸ் அவர்கள் தன் மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்தார்.

இன்றைய உலகில், மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் 35 நாடுகளில், 3 வயதுக்கும், 18 வயதுக்கும் இடைப்பட்ட பருவத்தில், 7 கொடியே 50 இலட்சம் சிறாரும் இளையோரும் வாழ்ந்து வருகின்றனர் என்றும், இவர்களது கல்வியை உறுதி செய்யும் கடமை அனைத்துலக சமுதாயத்தைச் சேரும் என்றும் உணர்ந்த நாடுகள், இந்த உலக நாளை உருவாக்கியுள்ளன.

இவ்வுலக நாள், ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் 9ம் தேதி சிறப்பிக்கப்படும் என்று ஐ.நா. அவை எடுத்த தீர்மானத்தையொட்டி, இப்புதனன்று, முதல்முறையாக இவ்வுலக நாள் சிறப்பிக்கப்பட்டது. 

மோதல்கள், வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து கல்வி நிலையங்கள் எப்போதும் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறிய UNESCO நிறுவனத்தின் தலைமை இயக்குனர், Audrey Azoulay அவர்கள், இந்த உலக நாள் நிறுவப்பட்டிருப்பது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டார்.

கோவிட் 19ன் தாக்கத்திற்குப் பின், கல்விக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படும் இவ்வேளையில், கல்விக்கு எதிராக நிகழும் அனைத்துவிதமான தாக்குதல்களிலிருந்தும் சிறாரும், இளையோரும் காக்கப்படவேண்டும் என்று UNESCO நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

கோவிட் 19 கொள்ளைநோய், உலகெங்கும் 90 விழுக்காட்டுக்கு அதிகமான குழந்தைகளின் கல்விவாய்ப்பை தடைசெய்துள்ளது என்றும், இந்தக் கொள்ளைநோயைத் தொடரும் நாள்களில், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வழிகளை உறுதி செய்வது முக்கியம் என்றும் குழந்தைகள் நலனிலும், கல்வியிலும் அக்கறை கொண்டுள்ள UNESCO மற்றும் UNICEF ஆகிய இரு ஐ.நா. அமைப்புக்களும் விண்ணப்பித்துள்ளன.

09 September 2020, 14:36