தேடுதல்

இந்தியச் சிறார் இந்தியச் சிறார் 

பெண்கள், சிறுமிகளுக்கு உரிமை மீறல்கள் அதிகம்

தற்போதைய கொள்ளைநோய் நெருக்கடியில், 192 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - உலகளாவிய அமைப்பு ஒன்றின் புதிய அறிக்கை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் பெண்கள் மற்றும், சிறாரின் உயிரிழப்புக்கள் குறைந்துவந்த நிலையில்,  இப்போதைய கோவிட்-19 கொள்ளைநோய், போர்கள், காலநிலை மாற்றத்தின் பிரச்சனைகள் ஆகியவை, இந்நிலைக்கு அச்சுறுத்தலை முன்வைத்துள்ளன என்று, செப்டம்பர் 25, இவ்வெள்ளியன்று வெளியான புதிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

யுனிசெப், மக்கள்தொகை கட்டுப்பாடு, பெண்கள், எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு, உலக வங்கி, உலக நலவாழ்வு ஆகிய, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள, “ஒவ்வொரு பெண், ஒவ்வொரு குழந்தை” என்ற உலகளாவிய இயக்கம் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  

2019ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்புக்கள், குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துவந்தது, கடந்த பத்து ஆண்டுகளில், நூறு கோடிக்கு அதிகமான சிறாருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, மற்றும், ஏறத்தாழ 2 கோடியே 50 இலட்சம் குழந்தை திருமணங்கள் தடுத்துநிறுத்தப்பட்டன என்று இவ்வறிக்கை கூறியுள்ளது.

தற்போதைய கொள்ளைநோய் நெருக்கடியில், 192 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சிறுமிகளும், பெண்களும் குடும்ப வன்முறை மற்றும், தவறான பயன்பாடுகளுக்கு அதிகம் உள்ளாகியுள்ளனர் என்றும், வறுமையும் பசியும் அதிகரித்துள்ளன என்றும், அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க உலகினர் அனைவரும் உடனடியாக ஒன்றிணைந்து செயல்படவேண்டும் மற்றும், நலவாழ்வு பராமரிப்பு அமைப்புமுறைகளை உறுதிப்படுத்தவேண்டும், இதன் வழியாக, மக்களின் வாழ்வைப் பாதுகாத்து, காப்பாற்ற முடியும் என்று, அந்த இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

26 September 2020, 15:20