தேடுதல்

Vatican News
தென்னாப்ரிக்கா தென்னாப்ரிக்கா  (AFP or licensors)

கடும் தண்ணீர் பற்றாக்குறை, சமுதாய பதட்டநிலைகளுக்கு...

இந்தியாவில் சென்னை நகரமும், தென்னாப்ரிக்காவில், கேப் டவுன் நகரமும், மழைப் பற்றாக்குறைவால், அண்மை ஆண்டுகளில், தண்ணீர் பற்றாக்குறைவை எதிர்கொண்டன - ஹாலந்து நாட்டு வல்லுனர் Kitty van der Heijden

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆசியா, மத்திய அமெரிக்காவின் சில பகுதிகள், ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதி ஆகியவற்றில், மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறைவை எதிர்கொள்வதால், அது, சமுதாய பதட்டநிலைகளுக்கும், புலம்பெயர்வுகளுக்கும், மோதல்களுக்கும் வித்திடுகின்றது என்று, வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வளர்ந்துவரும் மக்கள்தொகை, குறைவான மழைப்பொழிவு ஆகிய இரண்டுமே, தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படும் அதேவேளை, தற்போது குறைந்தது 17 நாடுகள், கடும் தண்ணீர் பற்றாக்குறைவை எதிர்கொள்கின்றன என்றும், அவர்கள் கூறினர்.

ஏமன் முதல் இந்தியா வரை, உலகின் 25 விழுக்காட்டு மக்கள், இத்தகைய துன்பநிலையில் வாழ்கின்றனர் என்றும், 2040ம் ஆண்டுக்குள், உலகில், நான்கில் ஒரு சிறார், கடும் தண்ணீர் பற்றாக்குறைவுள்ள பகுதியில் வாழ்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹாலந்து நாட்டு வல்லுனர் Kitty van der Heijden அவர்கள் கூறுகையில், தண்ணீர் இல்லையென்றால், மக்களின் புலம்பெயர்வு அதிகரிக்கும் எனவும், தண்ணீர் பற்றாக்குறை, புதிய போர்களுக்கு இட்டுச்செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எடுத்துக்காட்டுக்கு, இந்தியாவில் சென்னை நகரமும், தென்னாப்ரிக்காவில் கேப் டவுன் நகரமும், மழைப் பற்றாக்குறைவால், அண்மை ஆண்டுகளில், தண்ணீர் பற்றாக்குறைவை எதிர்கொண்டன என்று, Heijden அவர்கள் குறிப்பிட்டார். (AsiaNews/Agencies)

05 September 2020, 14:22