தேடுதல்

ஒபாக்கு சென் மடத்தில், மரப்பலகைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் ஒபாக்கு சென் மடத்தில், மரப்பலகைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் 

விதையாகும் கதைகள் : கண்ணுக்குத் தெரியாத சென் சூத்திரங்கள்

"டெட்சுஜென் அவர்கள், சென் சூத்திரங்களை, மூன்று பதிப்புக்களாக உருவாக்கினார். முதல் இரு பதிப்புக்கள், கண்ணுக்குத் தெரியாதவை என்றாலும், அவை இரண்டும், நூல்வடிவில் வெளியான மூன்றாம் பதிப்பைவிட மிகவும் உன்னதமானவை"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஜப்பான் நாட்டில், சென் (Zen) வாழ்வியல் முறைகளில் புலமைபெற்ற டெட்சுஜென் (Tetsugen) என்பவர், சென் சூத்திரங்களைத் தொகுத்து, ஒரு நூலாக வெளியிட விரும்பினார். மரப்பலகைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்களின் உதவியுடன், இந்நூல்களை அச்சடித்து, வெளியிடத் தீர்மானித்த டெட்சுஜென் அவர்கள், அதற்குத் தேவையான நிதியைத் திரட்டத் துவங்கினார். பத்து ஆண்டுகள், ஊர், ஊராகச் சென்று, தன் பணிக்குத் தேவையான நிதியை, அவரால் திரட்டமுடிந்தது.

அவ்வேளையில், ஜப்பானின் ஊஜி (Uji) நதியில் பெருவெள்ளம் உருவாகி, பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களிடையே பெரும் பட்டினி உருவானது. டெட்சுஜென் அவர்கள், தான் திரட்டிவைத்திருந்த நிதி அனைத்தையும், மக்களின் பசியைப்போக்க செலவழித்தார்.

வெள்ளம் வடிந்தபின், அவர் மீண்டும், தன் பணிக்கென, நிதி திரட்டினார். சில ஆண்டுகள் சென்று, நாடெங்கும், கொள்ளைநோய் பரவியது. தான் திரட்டியிருந்த நிதியைக் கொண்டு, நோயுற்றோரைப் பராமரித்தார், டெட்சுஜென்.

கொள்ளைநோய் விலகியதும், மீண்டும் ஒருமுறை நிதி திரட்டி, இம்முறை, அவர் திட்டமிட்டபடியே சென் சூத்திரங்கள் அடங்கிய நூலை வெளியிட்டார். இந்நூலை அச்சடிப்பதற்காக, மரப்பலகைகளில், அவர் செதுக்கிய எழுத்து வடிவங்கள், இன்றும், கியோட்டோ நகரில் உள்ள, ஒபாக்கு (Obaku) சென் மடத்தில், மக்கள் பார்வைக்கென வைக்கப்பட்டுள்ளன.

இந்த எழுத்து வடிவங்களை தங்கள் குழந்தைகளுக்குக் காட்டும் பெற்றோர், அவர்களிடம், "டெட்சுஜென் அவர்கள், சென் சூத்திரங்களை, மூன்று பதிப்புக்களாக உருவாக்கினார். முதல் இரு பதிப்புக்கள், கண்ணுக்குத் தெரியாதவை என்றாலும், அவை இரண்டும், நூல்வடிவில் வெளியான மூன்றாம் பதிப்பைவிட மிகவும் உன்னதமானவை" என்று கூறிவருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2020, 12:29