தேடுதல்

Vatican News
போலியோ சொட்டு மருந்து வழங்குதல் போலியோ சொட்டு மருந்து வழங்குதல்   (AFP or licensors)

போலியோ நோயிலிருந்து ஆப்ரிக்கக் கண்டம் விடுதலை

கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆப்ரிக்கக் கண்டத்தில், போலியோ நோயினால், புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சி தரும் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொடிய போலியோ நோயின் பிடியிலிருந்து, ஆப்ரிக்கக் கண்டம் விடுதலையடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2000மாம் ஆண்டிற்குள் உலகிலிருந்து போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்ற தீவிர முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தபோதிலும், 2020ம் ஆண்டு இம்மாதமே இந்நோய் ஆப்ரிக்கக் கண்டத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக, இக்கண்டத்தில் போலியோ நோயினால், புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மட்டுமே புதிய போலியோ பாதிப்புகள் இடம்பெற்றுவருகின்றன.

ஒரு காலத்தில், ஆப்ரிக்கக் கண்டத்தில், ஒவ்வோர் ஆண்டும் 75,000 குழந்தைகள்வரை, போலியோ நோயால் ஊனமாக்கப்பட்டுவந்தனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், பெரியம்மை நோயை ஆப்ரிக்காவிலிருந்து முற்றிலுமாக ஒழித்ததைத் தொடர்ந்து, இன்னொரு நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது தற்போதேயாகும்.

நான்கு ஆண்டுகளாக எவரும் புதிதாக இளம்பிள்ளைவாத நோயைப் பெறவில்லையெனினும், தற்போதைய கொரோனா தொற்றுக்கிருமி அச்சத்தால், போலியோ தடுப்பூசிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் போடமுடியாமல் இருப்பது, இந்நோய் திரும்பவும் வரலாம் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

ஆப்ரிக்கக் கண்டத்தில் கடைசி போலியோ பாதிப்பு, 2016ம் ஆண்டு, நைஜீரியாவில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

27 August 2020, 13:05