தேடுதல்

Vatican News
வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது 

வாரம் ஓர் அலசல்: வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது எது?

புனித அன்னை தெரேசா - இரு கை கூப்பி கடவுளை வணங்குவதைவிட, ஒரு கை நீட்டி உதவி செய். இரு கை உன்னை வணங்கும் கடவுளாக. கொடுப்பது சிறிது என்று தயங்காதே. ஏனென்றால், அதைப் பெறுபவருக்கு அது பெரிது.

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பள்ளி ஒன்றில் டிரேவர் மெக்கன்சி என்ற, 11 வயதுச் சிறுவன் ஒருவன் படித்து வந்தான். ஒரு நாள் அவனது வகுப்பு ஆசிரியர் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ஒன்றைக் கொடுத்தார். ஒவ்வொரு மாணவனும், உலகை மாற்ற விரும்பும் ஒரு கருத்தை அடிப்படையாக வைத்து, திட்டம் ஒன்றை தயாரித்து, அதனை வகுப்பறையில் விளக்கவேண்டும் என்று ஆசிரியர் சொன்னார். ஆசிரியர் குறித்த நாளில் வகுப்பறையில் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது திட்டத்தை விளக்கினார்கள். சிறுவன் டிரேவர், ஒரு திட்டத்தை முன்மொழிந்தான். நாம் ஒவ்வொருவரும் நாம் முன்பின் அறிந்திராத மூன்று பேருக்கு நம்மால் முடிந்த அளவு உதவவேண்டும். அந்த மூவரும் தங்களுக்கு, அறிமுகம் இல்லாத வேறு மூன்று பேருக்கு உதவுமாறு சொல்லவேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்யத் தொடங்கினால், இரண்டு வாரங்களில் 47 இலட்சத்து, 82 ஆயிரத்து, 969 பேருக்கு உதவிகள் கிடைத்திருக்கும். இது சங்கிலித்தொடராக நீண்டுகொண்டே இருக்கும். இந்த வகுப்பில் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். நமக்கு அறிமுகம் இல்லாத மூன்று மனிதருக்கு உதவ முன்வருவது மட்டுமே. இவ்வாறு சிறுவன் டிரேவர் தனது திட்டத்தை விளக்கி முடித்ததும், சக மாணவர்கள் அனைவரும், கொல் என்று சிரித்தார்கள். ஆனால் ஆசிரியரோ, இது ஓர் அருமையான திட்டம் என்று, சிறுவன் டிரேவரைப் பாராட்டினார்.

சிறுவன் டிரேவர், தனது திட்டத்திற்கு, முதலில் தானே செயலுருவம் கொடுப்பதற்கு முயற்சித்தான். தனக்கு அறிமுகம் இல்லாத, போதைப்பொருள் பழக்கம் உள்ள ஒருவரை, தன் வீட்டிற்கு அழைத்துவந்து உணவு தந்தான். ஆனால் அவனது அன்னைக்கு, அவன் செய்த செயல் பிடிக்கவில்லை. அந்த அன்னை, தன் மகன் மீது கோபப்பட்டார். எனவே டிரேவர், வீட்டைவிட்டு வெளியே சென்றான். அச்சமயத்தில் அவன் சில போக்கிரிகளிடம் மாட்டிக்கொண்டு கத்திக்குத்து வாங்கினான். அதேநேரம், அந்த சிறுவனின் உதவும் சங்கிலித்தொடரால் பயன் அடைந்த செய்தியாளர் ஒருவர், இந்த எளிமையான திட்டம் பற்றி இதழ்களில் எழுதத் தொடங்கினார். அந்தச் சிறுவனின் திட்டம் வெற்றிபெறத் தொடங்கியது. ஆக, ஒருவர் தன்னால் முடிந்த உதவியை, மூன்று பேருக்குச் செய்தால் போதும், இந்த உலகம் மாறி விடும் என்பதை, சிறுவன் டிரேவரின் எளிமையான திட்டம் உணர்த்துகிறது. இந்த மறுக்கமுடியாத உண்மையை உலகிற்கு உணர்த்திய, Pay it Forward என்ற ஹாலிவுட் படம் பற்றி, எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள், சிறிது வெளிச்சம் என்ற, நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்.

நமக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு ஆற்றப்படும்  உதவிகளுக்கு, எந்த எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. பிறருக்கு உதவி என்று சொன்னவுடனே, அது பணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது, ஓர் அன்பான, ஆறுதலான வார்த்தையாகவோ, செயலாகவோ இருக்கலாம். கல்லாதவருக்கு, இல்லாதவருக்கு கற்றுத்தருவதாகவோ, ஒரு நல்ல செய்தியை, சிந்தனையை அடுத்தவரோடு பகிர்ந்துகொள்வதாகவோ இருக்கலாம். ஆயினும் அவ்வாறு ஒருவர் செய்வது, சங்கிலித் தொடராக நடைபெற்றுக்கொண்டே இருக்கவேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை, மூன்று பேருக்கு, குறைந்தது, ஒருவருக்காவது செய்யவேண்டும். நமக்குத் தெரிந்த, நல்ல விடயங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். நாம் உதவி செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆலமரத்தின் நிழல் மட்டுமல்ல, புல்லின் நிழல்கூட ஏதோ ஒன்றிற்கு இளைப்பாறுதல் தருகின்றது என்பதே உண்மை. இவ்வாறு, எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லியுள்ளார். தனி ஒரு மனிதரின் மாறுபட்ட எண்ணம்தான், இந்த உலகில் மாற்றத்தின் ஆரம்பம். தனி ஒரு மனிதரின் மாறுபட்ட சிந்தனைதான், உலகளவில், பல பல புரட்சிகளுக்கு, அதன் விளைவாக, நல்மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது என்பது வரலாறு கூறும் உண்மை. 

பயணி, ஆட்டோக்காரர்

அன்று சென்னை விமான நிலையத்தில் இறங்கிய பயணி ஒருவர், பண்ருட்டி நகருக்குப் போக விரும்பினார். ஆனால், கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் எல்லாம், கிண்டி வராமல், நேராக பெருங்களத்தூர் சென்றது. அதனால் அந்த பயணி, பெருங்களத்தூருக்குச் செல்ல, ஆட்டோக்காரர் ஒருவரிடம், கட்டணம் எவ்வளவு என்று கேட்டார். அதற்கு அவர், 500 ரூபாய் சார் என்றார். 400 ரூபாய்க்கு வருவியா என்று அவர் கேட்க, சார் 450 ரூபாய், ஏறுங்க, என்றார் ஆட்டோ ஓட்டுனர். சரி என்று ஆட்டோவில் ஏறினார் பயணி. ஆட்டோ வேகமாகச் சென்று பல்லாவரம்  தாண்டியது. அப்போது அந்த பயணி, ஏம்பா தம்பி, நீ இந்த வழியாக சவாரி போனா, காலை சாப்பாட்டை எங்கே சாப்பிடுவாய்? என்று கேட்டார். சாலையோரக் கடைதான் சார் என்று, அந்த ஆட்டோக்காரர் சொல்ல, அப்படியானால், நீ வழக்கமாகச் சாப்பிடும் கடை எதுவோ, அங்கே நிறுத்து, காலை சாப்பாட்டை முடித்துவிட்டுப் போவோம் என்றார். இரண்டு கிலோ மீட்டர் சென்றபின், ஒரு தள்ளுவண்டி அருகே போய் ஆட்டோ நின்றது. நடுத்தர வயது நிரம்பிய பெண் ஒருவர், அந்தக் கடையை நடத்திக்கொண்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு கைம்பெண் போன்று இருந்தார். அந்த தள்ளுவண்டிக் கடையில் அவர்கள் இருவரும் இட்லி, வடை, பொங்கல், பூரி டீ எனச் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும், அந்த பயணி, சாப்பாட்டிற்கு எவ்வளவு என்று கேட்டார். அந்த பெண், 150 ரூபாய் சார் என்றார். உடனே, 200 ரூபாய் கொடுத்தார் அந்த பயணி. அந்த பெண், மீதிச் சில்லறைகளைப் பொறுக்கினார். அந்த நாள் ஞாயிற்றுகிழமை என்பதால், அலுவலகங்கள், மற்ற கடைகள் பூட்டி இருந்தன. அதனால் அந்த பெண்ணுக்கு மீதிப் பணத்தை கொடுக்க முடியவில்லை. சார், இன்றைக்கு வியாபாரமும் கொஞ்சம் மந்தம்தான் என்று அந்த பெண் சொன்னார். உடனே அந்த பயணி, சரிம்மா ஐம்பது ரூபாயை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், நாளைக்கு இந்த பக்கமாக வருவேன், அப்போது வாங்கிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோவும் புறப்பட்டது. அப்போது ஆட்டோ ஓட்டுனர், சார் நீங்க பண்ருட்டி போறீங்க.. நாளைக்கு வருவேன்னு 50-ரூபாயை அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்றீங்க என்று கேட்டார். அதற்கு அந்த பயணி, தம்பி இப்போது நாம் சாப்பிட்ட உணவை ஒரு உணவகத்தில் சாப்பிட்டிருந்தால், நிச்சயம் 500 ரூபாய் வரும். அப்புறம் டிப்ஸ், அது இது என 600-ரூபாய் கொடுத்திருப்போம். இல்லையா....? அதனால் தம்பி, நமக்கு எப்பொழுதெல்லாம்,  வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம், இந்த பெண் போன்று உள்ள மனிதர்களுக்கு, நாம் உதவவேண்டும். இவ்வாறு அந்த பயணி, ஆட்டோ ஓட்டுனரிடம் பேசிக்கொண்டே சென்றார். கட்டணம் வசூலிப்பது, அதன் வழியாக பொது சேவை செய்வது, புண்ணியத் தலங்கள் செல்வது,  நன்கொடை கொடுப்பது, உண்டியலில் போடுவது போன்றவை வழியாகத்தான், நாம் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை. நடைமுறை வாழ்க்கையிலே இப்படியும் புண்ணியம் தேடலாம் என்று அந்த பயணி கூறினார். ஆட்டோ பெருங்களத்தூர் வந்ததும், இந்தாப்பா நீ கேட்ட 450 ரூபாய் என, அவர் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அப்போது ஆட்டோ ஓட்டுனர், 400-ரூபாய் போதும் சார் என்றார். ஏம்பா தம்பி என்று அவர் கேட்டபோது, சார்,  அந்த 50 ரூபாய் உங்களிடம் இருந்தால், நீங்கள் இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீர்கள். அதன் வழியாக எனக்கும் புண்ணியம் கிடைக்கட்டும் சார் என்று சொன்னார். இறுதியாக அந்தப் பயணி, தனது ஆட்டோ பயண அனுபவத்தை, ஓர் இதழில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். அந்த ஆட்டோக்காரரின் புண்ணிய கணக்கு, நான் போடும் புண்ணிய கணக்கையும் விஞ்சி நின்றது. நமது பிறரன்பு செயல்கள் சங்கிலித்தொடராக நீண்டுகொண்டே செல்லவேண்டும்.

கைபேசி கடை

இந்த கொரோனா கொள்ளைநோய் காலத்தில், இல்லாதோர்க்கு உதவும் கரங்கள், நீண்டுகொண்டே வருகின்றன. இந்த காலக்கட்டத்தில், மாணவர்களுக்கு வலைத்தளம் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஆண்ட்ராய்டு கைபேசி வாங்க இயலாத இலட்சக்கணக்கான தந்தையர்கள் உள்ளனர். அத்தகைய தந்தையர்களில் ஒருவர், தன் மகளின் இணையவழி படிப்பிற்காக, கைபேசி கடை ஒன்றில், ஆண்ட்ராய்டு கைபேசி வாங்கிக்கொண்டு, அதற்குப் பணம் கொடுக்காமல் தப்பிச் சென்றார். அப்பொழுது, அந்த கடைக்காரர் அவரை மடக்கிப் பிடித்து அவர் கண்ணீர் கதையை கேட்டார். அதற்குப்பின், அவருக்கு இலவசமாகவே அந்த ஆண்ட்ராய்டு கைபேசியை, அந்த கடைக்காரர் வழங்கியுள்ளார்.

தமிழரசன்

மேலும், துாத்துக்குடியைச் சேர்ந்த, 23 வயது நிரம்பிய தமிழரசன், கொரோனா ஊரடங்கால், வேலையிழந்து, இரு குழந்தைகளோடு வறுமையில் தவித்த 35 வயது நிரம்பிய சூரியகலா என்ற பெண்ணுக்கு, தையல் மெஷின் ஒன்றை வழங்கி உதவி செய்துள்ளார். இந்த பெண்ணின் கணவர் அவரை விட்டுப் பிர்நதுசென்றபின், வீட்டு வேலைகள் செய்து பிள்ளைகளைக் காப்பாற்றி வந்தார். அந்த தாய், தையல் மெஷின் வாங்கித் தந்து உதவும்படியும், சமூக வலைதளத்தில் விடுத்திருந்த கோரிக்கையைப் பார்த்த தமிழரசன் அவருக்கு உதவியுள்ளார்.  இவ்வளவுக்கும், தமிழரசன், சிறு வயதில் பெற்றோரை இழந்து, அருப்புக்கோட்டை ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, பட்டம் பெற்றார். எங்கும் வேலை கிடைக்காமல், பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, அலங்காநல்லுார் வந்தார். பின், தான் சேமித்து வைத்திருந்த பணத்தில், டீ வியாபாரம் துவங்கியதோடு, தினமும், 30 பேருக்கு உணவு தானமும் வழங்கி வருகிறார்.

இல்லாதவருக்கு கொடுத்து வாழ்வதே, நம் வாழ்வுக்கு அர்த்தம் தருகிறது. நமது இரு கரங்களில் ஒன்று, நமக்கு உதவவும், இன்னொன்று அடுத்தவருக்கு உதவவும் இருக்கின்றது என்ற உணர்வு, வயதாக, வயதாக நம்மில் வளர்ந்து வருகிறது. செப்டம்பர் 05, வருகிற சனிக்கிழமை, புனித அன்னை தெரேசா இறைபதம் அடைந்த நாள். சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்கள், வறியோர், கைவிடப்பட்டோர், நோயாளிகள் போன்றோருக்கு 45 ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டாற்றிய அன்னை தெரேசா, விண்ணகம் சென்ற நாளை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், பிறரன்பு உலக நாளாக, 2012ம் ஆண்டில் அறிவித்து சிறப்பித்து வருகின்றது. புனித அன்னை தெரேசா சொன்னார் - இரு கை கூப்பி கடவுளை வணங்குவதைவிட, ஒரு கை நீட்டி உதவி செய். இரு கை உன்னை வணங்கும் கடவுளாக. கொடுப்பது சிறிது என்று தயங்காதே. ஏனென்றால், அதைப் பெறுபவருக்கு அது பெரிது. வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல, மாறாக மற்றவர் மனதில் நீ  வாழும்வரை. நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.

31 August 2020, 13:54