தேடுதல்

Vatican News
பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் 

வருங்காலத்தில் சரியான காரியங்களை ஆற்ற...

கடந்த காலத்திற்கு நம்மால் திரும்பிச் செல்லமுடியாது, மாறாக, இப்போதையச் சூழலை உண்மையான வாய்ப்பாகப் பயன்படுத்தி, வருங்காலத்தில், சரியான காரியங்களை ஆற்ற தீர்மானிக்கவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் கோவிட்-19 கொள்ளைநோயை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கற்றுத்தந்த பாடங்கள், வருங்காலத்தில், சரியான காரியங்களை ஆற்ற பயன்படுத்தப்படவேண்டும் என்று, ஐ.நா.நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றங்களின் அவைத்தலைவர்கள் (சபாநாயகர்கள்) துவங்கியுள்ள, இணையவழி உலகக் கருத்தரங்கில், ஆகஸ்ட் 20 இவ்வியாழனன்று  உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், இந்த கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், சமுதாயங்களைத் தொற்றியுள்ள சவால்கள் குறித்து எடுத்துரைத்தார்.

சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் சீரழிவு, நலவாழ்வு வசதிகள் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை, நிர்வாகத் தோல்விகளால் சமுதாயங்களில் உருவாகியிருந்த முரண்பாடுகள், மோதல்கள் போன்றவற்றை இந்த கொள்ளைநோய் பரவலுக்கு முன்னதாகவே, நம் சமுதாயங்கள் எதிர்கொண்டன என்பதையும், கூட்டேரஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்திற்கு நம்மால் திரும்பிச் செல்லமுடியாது, மாறாக, இப்போதையச் சூழலை உண்மையான வாய்ப்பாகப் பயன்படுத்தி, வருங்காலத்தில் சரியான காரியங்களை ஆற்ற தீர்மானிக்கவேண்டும் என்றும், ஐ.நா. பொதுச் செயலர் கேட்டுக்கொண்டார்.

கிளாஸ்கோவில் நடைபெறவிருந்த COP26 எனப்படும் காலநிலை மாற்றம் குறித்த உலக மாநாடு, கோவிட்-19ஆல், 2021ம் ஆண்டுவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான அழிவுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்றும், அது குறித்து அரசுகள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார். (UN)

21 August 2020, 12:54