தேடுதல்

Vatican News
ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்  ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்   (AFP or licensors)

பயங்கரவாதத்திற்கு பலியானவர்கள், மறக்கப்பட்டவர்கள் அல்ல

உண்மையை தேடுவதிலும், பாதிப்புகளைக் குணப்படுத்துவதிலும், உரிமைக் குரல்களை ஒலிக்கச் செய்வதிலும், அவர்களின் மனித உரிமைகளை, உயர்த்திப் பிடிப்பதிலும் உதவுவதன் வழியாக, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவ முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பயங்கரவாதத்திற்குப் பலியானவர்களுடன் தன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும், அவர்கள் மறக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை ஒவ்வொருவரும் உறுதிசெய்யவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார், ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் 

'பயங்கரவாதத்திற்கு பலியானவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் அனைத்துலக நாள்' ஆகஸ்ட் 21, வருகிற வெள்ளியன்று சிறப்பிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்கள், பயங்கரவாதத்தின் பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் அதேவேளை, உண்மையைத் தேடுவதிலும், பாதிப்புகளைக் குணப்படுத்துவதிலும், அவர்களின் குரல்களை ஒலிக்கச் செய்வதிலும், அவர்களின் மனித உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதிலும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவ முடியும், என்று கூறினார்.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு உதவும் வகையில் சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என அனைத்து நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களையும், ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக உரைத்தார், ஐ. நா. பொதுச் செயலர் கூட்டேரஸ்.

2017ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும், இந்த நினைவு நாளையொட்டி, இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐ.நா. உலக கருத்தரங்கு,  கோவிட்-19 நலப்பிரச்சனையையொட்டி அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது. (UN)

18 August 2020, 14:05