தேடுதல்

Vatican News
ஜார்ஜ் பெர்னார்டு ஷா ஜார்ஜ் பெர்னார்டு ஷா 

விதையாகும் கதைகள்: பிறரைப் பற்றி நினைப்பவர்கள்

எவர், மற்றவர் துயரங்கள் பற்றி சிந்திக்கத் துவங்குகிறாரோ, அவருக்கு நோய் என்பதே கிடையாது

மேரி தெரேசா: வத்திக்கான்

1925ம் ஆண்டில், இலக்கியத்திற்கு, நொபெல் விருது பெற்ற ஜார்ஜ் பெர்னார்டு ஷா அவர்களுக்கு, ஒரு சமயம் இதயத்தில் வலி. எனவே அவர், தன் நண்பர் மருத்துவரைத் தொலைப்பேசியில் அழைத்து, கட்டிலில் இருந்து எழுந்திருக்க முடியாமல் இருக்கிறேன், உடனே என்னை வந்து பார் என்று சொன்னார். உடனே மருத்துவர், அவரிடம், உனக்கு அறிவிருக்கிறதா, மருத்துவமனையில் நிறைய நோயாளிகள் எனக்காகக் காத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு உன்னை வீட்டில் வந்து எப்படி பார்க்க முடியும் என்று கேட்டார். அதற்கு ஷா அவர்கள், உனக்குத்தான் அறிவில்லை, என்னால் படுக்கையைவிட்டே எழுந்திருக்க முடியவில்லை, காலையிலிருந்து ஒரு டீ கூட போட்டுக் குடிக்க முடியவில்லை, எழுந்து நிற்க முடியவில்லை, நெஞ்சு வலிக்கிறது, படுத்தே கிடக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டதும் மருத்துவரும் புறப்பட்டு பெர்னார்டு ஷா அவர்களின் வீட்டிற்கு மாடிப்படியில் ஏறி வந்து சோபாவில் அமர்ந்தார். கழுத்தில் கட்டியிருந்த டையை அவிழ்த்துவிட்டுக்கொண்டே, ஐயோ வலிக்கிறதே என தன் நெஞ்சில் கை வைத்தார் மருத்துவர். உடனே ஷா அவர்கள், பதறிப்போய், படுக்கையைவிட்டு எழுந்து, அடுப்பை பற்றவைத்து, சூடாக ஒரு டீ போட்டு, அதோடு ஒரு ஆஸ்பிரின் மாத்திரையையும் எடுத்துவந்து மருத்துவரிடம் கொடுத்தார். மருத்துவர் அந்த மாத்திரையை சாப்பிடும்வரை அவர் அருகிலே நின்றுகொண்டிருந்தார். சிறிதுநேரம் சென்று, இப்போது எப்படியிருக்கிறது, நெஞ்சு வலி சரியாகிவிட்டதா  என்று கேட்டார் ஷா. சிறிதுநேரம் சென்று மருத்துவரும், தனது பையைத் திறந்து, கட்டணச் சீட்டில் 30 பவுண்டு என எழுதி அதை ஷா அவர்களிடம் கொடுத்தார். அதைப் பார்த்த ஷா அவர்கள், இதென்ன அநியாயம், எனக்கு மருத்துவம் பார்க்க வந்த உனக்கு நான் டீ போட்டு, மாத்திரை கொடுத்துள்ளேன், இப்போது என்னிடமே பணம் கேட்கிறாய் என்று கேட்டார். அதற்கு மருத்துவர், ஷா, உன்னால் எழுந்திருக்க முடியவில்லை, ஒரு டீ கூட போட்டுக் குடிக்க முடியவில்லை என்று சொன்னாய். ஆனால் இப்போது நீயே எழுந்து, எனக்கு டீ போட்டுக் கொடுத்தாய். அப்படியானால் உனது நோயை நான் குணமாக்கிவிட்டேன்தானே என்று கேட்டார் மருத்துவர். அதற்கு பெர்னார்டு ஷா அவரிடம், இந்த சிகிச்சைக்குப் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு மருத்துவர், ஒருவர், தன்னுடைய துயரங்களை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும்வரை, அவரால், உலகில் நீண்ட காலம் வாழ முடியாது. எவர், மற்றவர் துயரங்கள் பற்றி சிந்திக்கத் துவங்குகிறாரோ, அவருக்கு நோய் என்பதே கிடையாது. தன்னைப் பற்றியே நினைப்பவர்களுக்கு எப்போதுமே நோய்தான். பிறரைப் பற்றி நினைப்பவர்கள், உலகில் ஒரு சுடர்தான். புத்தர் சொன்னார் - பிறர் மீது அக்கறை உள்ளவர் நல்லவர். பிறர் மீது அக்கறை இல்லாதவர் கெட்டவர் என்று (நன்றி-சொற்பொழிவாளர் திருவாளர் சுகி.சிவம்)

31 August 2020, 13:50