தேடுதல்

Vatican News
இந்தோனேசியாவில் புத்தமதம் இந்தோனேசியாவில் புத்தமதம்  (AFP or licensors)

விதையாகும் கதைகள்: கைம்மாறு கருதாத செயலே வலுவைக் கூட்டும்

பாமர இளைஞர்களால் ஆற்ற முடிந்த செயல், ஏன் எங்களால் முடியவில்லை என்று, சீடர்கள், தங்களது சென் குருவிடம் கேட்டனர். அதற்கு அவர், நீங்கள் பலனை எதிர்பார்த்துச் சுமக்கப் பார்த்தீர்கள், ஆனால் அந்த இளைஞர்களோ கைம்மாறு கருதாமல் என்னைச் சுமந்தனர் என்று சொன்னார்

மேரி தெரேசா: வத்திக்கான்

அந்த மலையடிவாரத்தில் பல்லக்கில் அமர்ந்திருந்த சென் துறவி ஒருவர், தன் சீடர்களிடம், அந்த மலையுச்சிக்கு என்னைத் தூக்கிச் செல்லுங்கள், அங்கே உங்களுக்கு புதிய பல பாடங்களைக் கற்றுத்தரப் போகிறேன் என்று சொன்னார். சீடர்கள், மலையுச்சியைப் பார்த்து மலைத்தனர். ஆயினும் புதிய ஆன்மீகப் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் ஆசையில் தங்களின் குருவை தூக்கிச் சென்றார்கள். பாரம் தாங்கமுடியாமல் தடுமாறி, தடுமாறி அவர்கள் நடந்துசென்றனர். அந்நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த நான்கு கிராமத்து இளைஞர்களிடம் சீடர்கள் உதவி கேட்டனர். அந்த இளைஞர்களும் எவ்வித தயக்கமுமின்றி அந்த சென் குருவைத் தூக்கிக்கொண்டு மெதுவாகக்கூட செல்லவில்லை. அதற்கு மாறாக ஓடினார்கள். மலை உச்சியில் சென் குருவைச் சேர்த்தபின் அவரை வணங்கிவிட்டு, அந்த இளைஞர்கள் தங்களது வழியில் சென்றுவிட்டனர். பின்னர் சீடர்கள் தங்கள் குருவிடம், அந்த இளைஞர்களால் ஆற்ற முடிந்ததை ஏன் எங்களால் முடியவில்லை என்று கேட்டனர். அதற்கு அந்த சென் குரு, நீங்கள் பலனை எதிர்பார்த்துச் சுமக்கப் பார்த்தீர்கள், ஆனால் அந்த இளைஞர்களோ கைம்மாறு கருதாமல் என்னைச் சுமந்தனர், ஆதலால்தான் அவர்களுக்கு இருந்த வலிமை உங்களுக்கு இல்லை, கைம்மாறு கருதாத செயலே வலுவைக் கூட்டும், பரம்பொருளின் திசையைக் காட்டும் என்று பாடம் நடத்தி முடித்தார். (நன்றி - முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.)  

13 August 2020, 11:13