தேடுதல்

Vatican News
உரோம் தூதர்களின் கோட்டை உரோம் தூதர்களின் கோட்டை 

விதையாகும் கதைகள்: உண்மையான பாதுகாப்பு

நாம் தேடும் ஒவ்வொரு பாதுகாப்பு அம்சமுமே, நிலையற்ற நம் வாழ்வுக்கு நாம் போடுகின்ற வேலிகள். இந்த வேலிகளைத் தூக்கிப்போடும் மனிதரே சுதந்திரமான மனிதர்

மேரி தெரேசா: வத்திக்கான்

அரசர் ஒருவர் தன் பகைவர்களுக்குப் பயந்து கோட்டை ஒன்றைக் கட்டினார். அதில் யாரும் புகுந்துவிடக்கூடாது என நினைத்து, ஒரேயொரு வாசலை மட்டும் அவர் அதில் வைத்தார். வேறு எந்த இடத்திலும் ஜன்னலையோ, வாசலையோ வைக்கவில்லை. தன் எதிரிகள் எப்படியாவது புகுந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவ்வாறு அதைக் கட்டியிருந்தார் அரசர். அந்த ஒரு வாசலிலும் பல வீரர்களை காவலுக்கு வைத்திருந்தார் அவர். ஒருமுறை தன்னைப் பார்க்கவந்த தன் உயிர் நண்பரிடம், நான் இப்போதுதான் முழுமையான பாதுகாப்பை உணர்கிறேன் என்று சொன்னார் அரசர். உண்மையை மட்டுமே சொல்லி பழக்கப்பட்ட அந்த நண்பர், அரசருக்கு அவரது தவறைச் சுட்டிக்காட்ட விரும்பினார். அதனால் அரசரிடம், நண்பா, உன் பகைவர்கள், இந்த கோட்டைக்குள் இருக்கின்ற ஒரே வாசல் வழியாகக்கூட வர வாய்ப்பிருக்கிறது. அதனால் அந்த வாசலையும் நீ அடைத்துவிடு, அப்போது நீ இன்னும் அதிகப் பாதுகாப்பாக இருக்கலாம் என்று சொன்னார். அதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அரசர், இந்த ஒரு வாசலையும் அடைத்துவிட்டால், என் கோட்டை கல்லறைபோல் ஆகி விடுமே என்று கூறினார். அப்போது அந்த நண்பர், இப்போது மட்டும் உனது கோட்டை எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

ஆம். இந்த அரசர் போன்று, நாமும் நம் பாதுகாப்பை பல்வேறு செயல்களில் தேடுகிறோம். ஆனால் நாம் பாதுகாப்பு என்று நினைப்பவைதான், நமது எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம் என்பதை நாம் உணர்வதில்லை. அவற்றில் எந்த அளவுக்குப் பாதுகாப்பைத் தேடுகிறோமோ அந்த அளவுக்கு வாழ்வைக் குறுக்கிக்கொள்கிறோம் என்று அர்த்தம். நாம் தேடும் ஒவ்வொரு பாதுகாப்பு அம்சமுமே, நிலையற்ற நம் வாழ்வுக்கு நாம் போடுகின்ற வேலிகள். இந்த வேலிகளைத் தூக்கிப்போடும் மனிதரே சுதந்திரமான மனிதர். அத்தகைய மனிதருக்குள்தான் கடவுள் குடியிருக்க முடியும். ஏனெனில் கடவுள் சுதந்திரமானவர். (இன்றைய சிந்தனை 20193)

10 August 2020, 13:31