தேடுதல்

Vatican News
காஷ்மீரில் கொரோனா கிருமி பரிசோதனை காஷ்மீரில் கொரோனா கிருமி பரிசோதனை  (AFP or licensors)

விதையாகும் கதைகள்: பன்மடங்காக பலனளிக்கும் ஆசீர்கள்

மற்றவரை நாம் மனதார ஆசிர்வதிக்கையில், வாழ்த்துகையில், அவை குணப்படுத்தும் விதைகளை மட்டுமல்ல, முதிர்ந்த வயதில் தூக்கியெறியப்படும் காலக்கட்டத்தில், மகிழ்வின் மலர்களை நம்மில் மலரச்செய்யும்

மேரி தெரேசா: வத்திக்கான்

வயதுமுதிர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இளைஞன் ஒருவன் ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு வந்து, அவர் சாப்பிட உதவி செய்வது, குளிக்க வைப்பது, மருத்துவமனை தோட்டத்திற்கு அவரை அழைத்துச் சென்று அவரோடு உரையாடுவது, பின்னர் அவரைப் படுக்கையில் உறங்க வைப்பது, இப்படி...அவரை மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொண்டான். ஒருநாள் அந்த முதியவருக்கு மருந்து கொடுக்க வந்த செவிலியர் அவரிடம், உங்களது பாசமான மகனை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக, அவன் ஒவ்வொரு நாளும் உங்களை வந்து பார்த்து உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறான் என்று சொன்னார். அதற்கு அந்த முதியவர் இவ்வாறு சொன்னார். அந்த இளைஞன் எனது மகன்களில் ஒருவனாக இருந்தால் எவ்வளவு மகிழ்வேன். அவன் எங்கள் வீடு உள்ள பகுதியில் வாழ்கின்ற ஓர் அனாதை. பல ஆண்டுகளுக்குமுன், ஒருநாள், அவன் தன் பெற்றோரை இழந்த துயரத்தில் ஒரு கோவில் வாசலின்முன் அழுதுகொண்டிருந்தான். அப்போது அவனைச் சந்தித்த நான், அவனுக்கு ஆறுதல்கூறி, கொஞ்சம் மிட்டாய்களை வாங்கிக் கொடுத்தேன். அதற்குப்பின் அவனை நீண்டகாலமாக நான் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. அவன் வளர்ந்து இளைஞனானபின், ஒரு நாள் திடீரென என்னையும் எனது மனைவியையும் பார்க்க வந்தான். பின்னர் ஒவ்வொரு நாளும் வந்து எங்களை நலம் விசாரித்துச் செல்வான். இப்போது நான் நோயுற்றபின், எனது வயதுமுதிர்ந்த மனைவியை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான். அதோடு, ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு வந்து எனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து வருகிறான். ஒருநாள் அவனிடம், மகனே, எங்கள் இருவர் மீது இவ்வளவு அக்கறை காட்டி, எங்களைக் கவனித்துக்கொள்கிறாயே இது ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவன், வெறும் புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டுச் சொன்னான், அந்த மிட்டாயின் சுவை இன்னும் எனது வாயில் உள்ளது என்று.  

மற்றவரை நாம் சந்திக்கும்போது, அவர்களோடு உரையாடும்போது, அவர்களின் உடல்நலன், வேலை, சமுதாயத்தில் அவர்களின் நிலைமை, கடவுளோடும், மற்றவரோடும் அவர்கள் கொண்டிருக்கும் உறவு போன்ற எல்லாவற்றையும் வாழ்த்திப் பேசுவோம், அவர்களை மனதார ஆசிர்வதிப்போம். ஏனெனில் அத்தகைய ஆசிர்வாதங்கள், மற்றவரில் குணப்படுத்தும் விதைகளை மட்டுமல்ல, நாம், வாழ்வில் உதவாக்கரையாகத் தூக்கியெறியப்படும் காலக்கட்டத்தில், மகிழ்வின் மலர்களை நம்மில் மலரச்செய்யும். எனவே நாம் மற்றவரின் வாய்களில் எத்தகைய சுவையை விட்டுச் செல்கிறோம் என சிந்திப்போம். வாழ்த்துங்கள். இரட்டிப்பாக வாழ்த்தப்படுவீர்கள் (நன்றி- Blessing stories)

03 August 2020, 13:40