தேடுதல்

Vatican News
ஹாங்காங்கில் புல்வெளியில் ஓய்வெடுக்கும் பசு ஹாங்காங்கில் புல்வெளியில் ஓய்வெடுக்கும் பசு  (ANSA)

விதையாகும் கதைகள் : சிறுவனின் அறிவு

பலங்களைக் காட்டி பிரச்சனைகளைச் சீர்செய்ய நினைப்பதைவிட, அந்தந்த நிகழ்வுக்கேற்ப, சாதுரியமாகச் செயல்படுவதே பலன்தரும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

பால்காரர் ஒருவர், தன் பசுவை இழுத்துக்கொண்டு சாலையோரமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த பசு, திடீரென அடம்பிடித்து, சாலையின் நடுவில் அமர்ந்துவிட்டது. குறுகலான அச்சாலையில், இரு சக்கர வாகனம் தவிர, வேறு எந்த வாகனமும் செல்லமுடியாதபடி, பசு, சாலையில் அமர்ந்திருந்தது. பால்காரர் எவ்வளவோ முயற்சி செய்தும், அப்பசுவை, இம்மியளவும் நகர்த்த முடியவில்லை.

அவ்வழியே காவலர் ஒருவர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த தடியையும் வைத்து மிரட்டிப்பார்த்தார். பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப்பார்த்தார். பசு அசையவில்லை. அப்போது வேறு ஒரு நபர், அவ்வழியாக வந்தார். அமர்ந்திருந்த பசுவை, மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. மல்யுத்த போட்டியொன்றில் வெற்றிபெற்று திரும்பிக்கொண்டிருந்த வீரர் ஒருவர், அவ்வழியே வந்தார். மூன்று பேரையும் நகரச் சொல்லிவிட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை. அப்போது, அவ்வழியே ஒரு சிறுவன் வந்தான். அவன், அருகே வளர்ந்து நின்ற புற்களைப் பறித்துக் கட்டாகக் கட்டி பசுவின் முகத்தருகே காட்டினான். பசு, புல்லை சாப்பிட எழுந்தது. சிறுவன், புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவன்பின்னே சென்றது.

தங்கள் பலங்களைக் காட்டி பிரச்சனைகளைச் சீர்செய்யச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சில எளிய நிகழ்வுகளில்தான், கற்றல் தானாகவே உருவாகிறது என்பதை, அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.

26 August 2020, 16:25