தேடுதல்

Vatican News
இந்தியாவில் சுதந்திர தினம் 150820 இந்தியாவில் சுதந்திர தினம் 150820  (AFP or licensors)

நேர்காணல்: இந்தியாவின் சுதந்திர வரலாறும், இன்றைய நிலைமையும்

இன்று உலகில் பொருளாதார வளர்ச்சி, அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒற்றுமை என எல்லாவற்றிலும் இந்தியாவினுடைய கருத்தும், பங்களிப்பும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.  இந்தியர்கள், 74வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர். இவ்வேளையில், இந்நாடு சுதந்திரம் பெற்ற வரலாறு, அதன் சாதனைகள், தற்போது அந்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றை இன்று வாட்சப் ஊடகம் வழி பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி கு.ஜெயக்குமார் அவர்கள். உதகை மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், கோத்தகிரி புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் ஆவார்.

இந்தியாவின் சுதந்திர வரலாறும், இன்றைய நிலைமையும்

அருள்பணி ஜெயக்குமார், கோத்தகிரி

வத்திகான் வானொலி நேயர்களே உங்கள் அனைவருக்கும் மகிழ்வான வணக்கம்.

ஆகஸ்டு மாதம் என்றாலே ஆண்டவரின் தாயின் விண்ணேற்புப் பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடும். அதேவேளையில் நம் இந்திய திருநாடு அந்நியரின் அடிமைநிலையிலிருந்து விடுதலைபெற்ற சுதந்திரப் பெருவிழாவையும் நாம் கொண்டாடுவோம். கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல் இந்த ஆண்டு கொரோனா நோயின் காரணமாக, நம்முடைய சுதந்திர விழாவானது, மிகவும் எளிமையாகவும், அதேநேரத்தில் நாட்டுப்பற்றை எல்லாருக்கும் உணர்த்தும் விதமாகவும் கொண்டாடப்பட்டது.

பாரத நாட்டினுடைய வரலாறு எப்படிப்பட்டது? பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கிய ஒரு வரலாறு அது. பல்வேறு வளங்கள், பழமையான நாகரீகங்கள், புதுமையான சிந்தனைகள், பலவித பழக்கவழக்கங்கள், பல்வேறு மொழிகள், மதங்கள், இனங்கள் என்று, மனித நாகரீகத்தின் அருங்காட்சியமாக விளங்கியது நம் தாய் திருநாடு. அதனால்தான் வாணிபம் செய்ய இங்கு வந்த ஆங்கிலேயர் நம்மை வஞ்சகமாய் தங்கள் வலைக்குள் வீழ்த்தினார்கள். வந்தாரை வாழவைத்த நாம் அவர்களுக்கு அடிமைகள் ஆனோம். அனைத்தையும் இழக்கத் தொடங்கினோம். அல்லலுற ஆரம்பித்தோம். ஆங்கிலேயரின் ஆதிக்கம் தந்த அழுத்தம், நம்மை மூச்சு முட்ட வைத்தது.  உயிர் பிழைக்க வேண்டிய கட்டாயம். அப்பொழுது உதித்தது விடுதலை வேட்கை.

1857ம் ஆண்டு முதல் விடுதலைப் போர் ஆங்கிலேயரை சற்று ஆட்டம் காண வைத்தது. அதுவரை அடங்கியிருந்த நம்மவர்கள் வீடுதலைக் காற்றை சுவாசிக்க விருப்பமாய் வீதி வந்தனர். அடக்குமுறைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஆனாலும் அஞ்சவில்லை. அன்னை பூமி அழிந்திடாமல் காக்க ஆதரவாய் கரம் கோர்த்தனர். எத்தனை இழப்புகள்? தங்கள் உயிரை இழந்தார்கள். உடமைகளை இழந்தார்கள். உறவுகளை இழந்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார்கள். எதற்காக? சுதந்திரம் எமது பிறப்புரிமை. அதை அடைந்தே தீர்வோம்! என்ற உயரிய நோக்கத்தை அடைவதற்காக. விடுதலைத் தாகம் வீறுகொண்டு எழுந்தே இருந்தது. வீரமாய் பலர் போராடினர். பலர் வீழ்ந்து போயினர்.

அண்ணல் காந்தியின் அகிம்சை போராட்டம் அவனிக்கே பாடம் கற்றுத்தந்தது. அவர், ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவை தன் போராட்டத்தின் அச்சாணியாய் கொண்டார். இன்னும் பல தலைவர்கள் அண்ணல் காந்தியோடு இணைந்து போராடினார்கள். அன்னை பூமியை அடிமை நிலையிலிருந்து மீட்க வேண்டும் என்கிற ஆவல் கொண்டனர். ஜவஹர்லால் நேரு, திலகர், பட்டேல், சுபாஸ்சந்திர போஸ், பகத்சிங், திருப்பூர் குமரன், பாரதியார் என்று, முன்கள வீரர்களாய் பலரும் நின்று போராடினார்கள். எல்லாருடைய கடின உழைப்பும் கனி  தந்த நாள் தான் ஆகஸ்டு 15, 1947. ஆம் அன்றிலிருந்து நம் மண் அடிமை நிலையிலிருந்து மீண்டது. நமக்கான தேசம் உருவானது. புது பாரதம் பரந்த நிலப்பரப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற உன்னத நிலையை நம் நாடு பெற்றது.

சமயச் சார்பற்ற, வேற்றுமையில் ஒற்றுமை காணும், வளர்ச்சியை முதன்மையாகக் கொண்டு, கடந்த  73 ஆண்டுகளாய் நம் நாடு பீடு நடைபோடுகிறது. இத்தனை ஆண்டுகளாய் நம் நாட்டில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன தெரியுமா? எல்லாவற்றிலும் நாம் ஏற்றம் பெற்றிருக்கிறோம். விவசாயம் தொடங்கி, விஞ்ஞானம் வரையிலும், வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் சாதனைகளை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். கல்வித் துறையில் மிக வேகமான வளர்ச்சியை நாம் அடைந்து கொண்டிருக்கிறோம். இங்கு கல்வி கற்று இன்று உலகின் பல முன்னணி  தொழில் நிறுவனங்களை நிர்வகிப்பவர்களாக இந்தியர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்குமே பெருமை அளிக்கக்கூடிய ஒரு விடயம். இன்று உலகில் பொருளாதார வளர்ச்சி, அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒற்றுமை என  எல்லாவற்றிலும் இந்தியாவினுடைய கருத்தும், பங்களிப்பும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இனம், மதம், மொழி என்று மிகப் பெரும் வேற்றுமைகளை கொண்டிருக்கும் ஒரு நாடு, குறைந்த ஆண்டுகளில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கும் என்றால் அது ஆச்சரியமே!

எது இப்படிப்பட்ட ஒரு சாதனைகளை படைக்க வைத்தது? வேற்றுமையில் ஒற்றுமையே என்கிற அந்த உயரிய நோக்கமே இப்படிப்பட்ட சாதனைகளைப் படைக்க வைத்திருக்கின்றது. இவையனைத்தும் நாம் பெருமைப்பட வேண்டிய சாதனைகள். காலம் காலமாய் நாம் கற்றிருக்கிற பண்பாடும், கலாச்சாரமுமே நம்மை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.

பல்வேறு விதங்களில் வளர்ச்சியை எட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் நம் நாட்டைப் பார்த்து பெருமை  கொள்ளும் அதே வேளையில் புதிதாக வேர்விடத் தொடங்கியிருக்கும் சில பிரச்சனைகள் நம்மை கவலையடையச் செய்கிறது. அடிப்படையில் சமயச் சார்பற்ற, சமய சகிப்புத்தன்மை நிறைந்தது நம் நாடு. ஆனால் சமீப காலங்களில் மதங்களின் பெயரால், மொழிகளின் பெயரால், பல மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பலர் படுகொலை செய்யப்படுகின்றனர். ஒரு சில சமய சித்தாந்தங்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்க முயன்று கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். பிற்போக்கான சிந்தனைகள் வளர தொடங்கியிருக்கின்றன. இவை நம் வளர்ச்சியை கட்டுப்படுத்துபவையாக இருக்கின்றன. அரசியல் சூழ்நிலையும் பல குழப்பங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றது. தகவல் தொழில்நுட்பம், வலைதளங்கள், நவீன கண்டுபிடிப்புகள் இன்றைய தலைமுறையினரை மிகப் பெரிய அளவில் பாதிக்கின்றன. பல கலாச்சார சிக்கல்களில் சிக்கி சரியானவற்றை தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

நம் நாட்டின் மிகச் சிறந்த சமூக அமைப்பான குடும்ப வாழ்க்கைமுறை, பல காரணங்களால் சிதைந்து கொண்டிருக்கின்றது. வளர்ச்சி என்ற போர்வையில் வளங்களை இழந்து கொண்டிருக்கின்றோம். மக்களின் எதிர்ப்பையும் மீறி, பல திட்டங்களை செயல்படுத்த முயன்று கொண்டிருக்கின்றோம். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அதற்கு உதாரணங்களாக சமீப காலங்களில் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டம்புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, போன்றவை, ஒருசாரரை உயர்த்தி, பலரை வீழ்த்தும் சட்டங்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இப்படி பலப் பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து கொண்டிருப்பதை நாம் மறுக்க இயலாது. ஆனாலும் மாற்றம் வரும் என்கிற நம்பிக்கையில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வேர் விடும் பிரச்சனைகளை முளையிலே கிள்ளி எறிந்தால், தொட முடியாத இலக்குகளையும் தொட்டு இமயமாய் உயர்ந்து நிற்க முடியும். இன்று நாம் பல கடுமையான சூழ்நிலைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். பெருந்தொற்று நோயான கொரோனா வேகமாகப் பரவி, பலரையும் வீழ்த்திக் கொண்டிருக்கிறது. எல்லாருடைய மனத்திலும் அச்சம் சூழ்ந்திருக்கிறது. வாழ்வதற்கான நம்பிக்கை குலைந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் பொருளாதார தேக்கநிலை மக்களை மிகப் பெரிய அளவு வாட்டிக் கொண்டிருக்கிறது. வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். பருவமழையின் கோரத்தாண்டவம் பல மாநிலங்களை நிலைகுலையச் செய்திருக்கின்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்நாளைச் சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம். நம் எல்லா துன்பமும், இடர்களும், கவலைகளும், அச்சங்களும் மறைய வேண்டும். மகிழ்ச்சிக்கான நம்பிக்கை நம்முள் பிறக்க வேண்டும். நம் அனைவரின் கரங்கள் ஒன்றாக இணைந்து எல்லா இடர்பாடுகளையும் கடந்து, நம் தாய் நாட்டை தரணி போற்றும் நாடாக உயர்த்த வேண்டும். நல் ஆண்டவர் தன் ஆசிரால் நம் நாட்டை நிரப்பி, எல்லா விதமான வரங்களையும் தந்து, தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்க உதவுவாராக!

வாழ்க பாரதம்! வளர்க அதன் புகழ்! இறைவனுக்கு நன்றி!

அருட்தந்தை. கு.ஜெயக்குமார் உதகை மறைமாவட்டம்

தாளாளர் மற்றும் தலைமையாசிரியர்,

புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி,

கோத்தகிரி. நீலகிரிமாவட்டம் - 643 217

20 August 2020, 12:44