தேடுதல்

Vatican News
வலைத்தளம் வழியே உரை வழங்கும் ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் வலைத்தளம் வழியே உரை வழங்கும் ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்  ((c) dpa-pool)

பெண்களை முன்னேற்றுவதற்கு காலம் தாழ்த்தவேண்டாம், ஐ.நா.

கோவிட்-19 கொள்ளைநோய் எல்லா இடங்களிலும், எல்லாரையும் பாதித்துள்ளது, ஆயினும், இது எல்லாரையும் சமமாகப் பாதிப்பதில்லை – ஐ.நா.

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

கோவிட்-19 கொள்ளைநோய் எல்லா இடங்களிலும், எல்லாரையும் பாதித்துள்ளது, ஆயினும், இது எல்லாரையும் சமமாகப் பாதிப்பதில்லை என்று, மக்கள்தொகை உலக நாளுக்கென வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார், ஐ.நா. நிறுவனத்தின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்.

ஜூலை 11, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட மக்கள்தொகை உலக நாளுக்கென செய்தி வெளியிட்ட கூட்டேரஸ் அவர்கள், ஏழைகள் மத்தியில், குறிப்பாக, பெண்கள் மற்றும், சிறுமிகள் மத்தியில், சமத்துவமற்ற மற்றும், எளிதில் நோய் தொற்றக்கூடிய வலுவற்ற நிலைகள் அதிகம் நிலவுகின்றன என்று கூறியுள்ளார்.

“கோவிட்-19 காலத்தில், பெண்கள் மற்றும், சிறுமிகளின் நலவாழ்வையும் உரிமைகளையும் பாதுகாத்தல்” என்ற மையக்கருத்துடன், மக்கள்தொகை உலக நாள் இவ்வாண்டு கடைப்பிடிக்கப்பட்டது.

இக்கருத்தை மையப்படுத்தி, செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், பல நாடுகளில், கோவிட்-19 குறித்த கட்டுப்பாடுகள் நிலவும் இவ்வேளையில், நலவாழ்வு அமைப்புகளும், இந்நோயைத் தடுப்பதற்கு கடுமையாக முயற்சித்து வருகின்றன என்றும், அதேநேரம், பாலியலை மையப்படுத்திய வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

2030ம் ஆண்டின் இலக்குகளை எட்டுவதில் ஐ.நா. நிறுவனம் இதுவரை கண்டுள்ள முன்னேற்றங்கள், இந்த கொள்ளைநோயால் பின்னுக்குத் தள்ளப்பட அனுமதிக்க முடியாது எனவும், பெண்கள் மற்றும், சிறுமிகளின் நலவாழ்வையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்கும், இந்த உலக நாளில் உலகினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார், ஐ.நா.பொதுச் செயலர்.

உலகின் வருங்காலம், பெண்கள் மற்றும், சிறுமிகளைச் சார்ந்தே உள்ளதால், அவர்களை முன்னேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, இனியும் நேரத்தை வீணாக்குவது கூடாது என்றும், கூட்டேரஸ் அவர்களும், ஏனைய ஐ.நா. அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

இன்று உலகில் 20 கோடிக்கு அதிகமான பெண்கள், வசதியின்மை காரணமாக, தாங்கள் கருவுறுவதை தாமதிக்க, அல்லது கருவுறுவதைத் தடுப்பதற்கு விரும்புகின்றனர் என்று, உலக மக்கள்தொகை நிதி அமைப்பின் (UNFPA) இயக்குனர் Natalia Kanem அவர்கள் கூறியுள்ளார்.

11 July 2020, 13:26