தேடுதல்

Vatican News
2018ம் ஆண்டில், ‘மிஸ் இந்தியா’ என்ற பட்டத்தை வென்ற அனுகீர்த்தி வாஸ் 2018ம் ஆண்டில், ‘மிஸ் இந்தியா’ என்ற பட்டத்தை வென்ற அனுகீர்த்தி வாஸ்  

வாரம் ஓர் அலசல்: வாழ்வுக்கு வழிகாட்டும் வலிகள்

தோல்விகளும், வலிகளும் கற்றுத்தரும் பாடங்கள் அற்புதமானவை, நிரந்தரமானவை. தோல்வி போல் வெற்றிப் பாதையைச் சொல்லித்தருவது எதுவுமே கிடையாது

மேரி தெரேசா: வத்திக்கான்

“தோல்விகளே வாழ்வுப் படிகளைத் தாவிச்செல்ல தோள் கொடுத்தன; துன்பங்களே வெற்றிக்குத் தூபம் போட்டன; வலிகளே வாழ்வுக்கு வழிகாட்டின; காயங்களே வாகைசூட கைகொடுத்தன; அவமானங்களே என்னை சிங்கமாய் கர்ஜிக்கச் செய்தன; அறிந்து கொண்டேன் வெற்றிக்கான சூத்திரத்தை” என, சுஜித்ரா அவர்களின் கிறுக்கல்களை, வாட்சப் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

இந்நாள்களில் கொரோனா ஊரடங்கால் இலட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து, கடும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அன்றாட உணவுக்கே போராடும் நிலைக்கு வந்துவிட்ட பலர், எந்த வேலையானாலும் சரி, குறைந்த ஊதியம் கிடைத்தால்கூட போதும் என்ற மனநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அதேநேரம், கோவிட்-19 கொள்ளைநோய், வாழ்வில் உருவாக்கியுள்ள தோல்விகளையும், மனவலிகளையும் வெற்றிக்கு வழிகாட்டும் பாதைகளாகவும் பலர் அமைத்துள்ளனர். இவ்வாறு அமைத்துள்ளவர்களில் ஒருவர், மதுரையைச் சேர்ந்த உமா சல்மா. 26 வயது நிரம்பிய இளம் தாயான உமா சல்மா அவர்கள், வீட்டுவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இப்போதைய கோவிட்-19 ஊரடங்கால், இவர் தன் வேலையை இழந்தார். ஆயினும் இவர், மனம் தளராமல், தனது தந்தை செய்துகொண்டிருந்த தேநீர் விற்பனைத் தொழிலை எடுத்து நடத்தி, குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். உமா சல்மா அவர்கள், விகடன் இதழிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்.

உமா சல்மா

எங்கள் வீடு, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்புறம் இருக்கின்ற இந்திரா நகர் பகுதியில்தான் இருக்கிறது. எங்கள் அப்பா தேனீர் கடை நடத்தி, எங்களை நல்லபடியாக வளர்த்தார். திருமணம் முடிந்து, கேரளாவில் என் மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக இருந்தேன். என் கணவருக்கு குடிப்பழக்கம் அதிகம். இதனால் ஒவ்வொரு நாளும் வீட்டில் சண்டைதான். அவரது குடிப்பழக்கம் அதிகமானதால், அவரைவிட்டு பிரிந்து வந்துவிட்டேன். என் மகனை இப்போது எங்கள் அப்பா வீட்டில் வைத்துத்தான் வளர்க்கிறேன். அப்பா இறந்துவிட்டதால், நான் வீட்டுவேலை செய்து பிழைக்கிறேன். சில வீடுகள் தூரமாக இருப்பதால், அப்பாவுடைய வண்டியைச் சரிசெய்து வேலைக்குப் போய்க்கொண்டு இருந்தேன். கொரோனா பயத்தால் இப்போதைக்கு வீட்டுவேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டனர். வேறு வழி தெரியவில்லை. என் அப்பா செய்துவந்த தேனீர் வியாபாரத்தைக் கையில் எடுத்து, தெருத்தெருவாக விற்றுவருகிறேன். தமுக்கம், கோரிப்பாளையம், அண்ணா பேருந்துநிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று, சுற்றி சுற்றி வருகிறேன். காலையில் 30 டீ, மாலையில் 30 டீ என, ஒரு நாளைக்கு 60 டீ விற்கிறேன். ஒரு டீ க்கு மூன்று ரூபாய் லாபம் கிடைக்கிறது. இப்போதைக்கு இதுபோதும். துணைக்கு அக்கா குடும்பம் இருக்கிறது. ஆனால், அவர்கள் இருக்கிற நிலைமையில் நாமும் அவர்களுக்கு கஷ்டம் கொடுக்கவேண்டாம், ஏதாவது வேலைசெய்ய நினைத்து, இந்த தேனீர் வியாபாரத்தைச் செய்கிறேன். நிச்சயம் என் மகனை நன்றாக வளர்த்து சிறந்த மனிதனாக உயர்த்துவேன். எனக்கு அரசு, கடனாக, ஒரு சிறிய பெட்டிக்கடை மட்டும் வைத்துக்கொடுத்தால், அதை வைத்து நிம்மதியாக பிழைத்துக்கொள்வேன். கிடைக்கிற வருமானத்தில், அரசுக்கு கடனையும் கட்டிவிடுவேன்.

இவ்வாறு நம்பிக்கையுடன் கூறியுள்ளார், 26 வயது நிரம்பிய இளம் தாய் உமா சல்மா. அனுகீர்த்தி

2018ம் ஆண்டில், ‘மிஸ் இந்தியா’ என்ற பட்டத்தை வென்றவர், அனுகீர்த்தி வாஸ் (Anukreethy Vas). இந்த மகுடத்தைப் பெற்றுத்தந்த போட்டியின் கடைசிச் சுற்றில், “உங்கள் வாழ்வில் சிறந்த ஆசான் யார்... வெற்றியா? தோல்வியா?” என்ற கேள்வி, அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அனுகீர்த்தி அவர்கள்,  “தோல்வியே என் சிறந்த ஆசான் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் நாம் திருப்தி அடைவதால், நமது வளர்ச்சி நின்றுவிடும். ஆனால், தொடர்ந்து நீங்கள் தோல்வியடையும்போது, உள்ளுக்குள் வெற்றி பெறவேண்டும் என்ற வெறி அதிகரிக்கும். அது நமது இலக்கை நோக்கி நம்மை உழைக்கச் செய்யும். கிராமப் பின்னணியில் வளர்ந்து, பெரும் போராட்டங்களைச் சந்தித்து, இன்று உங்கள் முன் நான் நிற்கிறேன் என்றால், அதற்கு, என் வாழ்வில் நான் சந்தித்த தோல்விகள்தான் காரணம். என் அன்னையத் தவிர எனக்கு அரவணைப்புத் தர வேறு யாரும் இல்லை. என்னைப் பொறுத்தவரை தோல்விகளும், விமர்சனங்களும்தான் என்னை நம்பிக்கையான, சுதந்திரமான பெண்ணாக, இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்தியுள்ளது. தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருங்கள். தோல்விகள் உங்களைக் காயப்படுத்தினாலும், வெற்றி அதற்கு நிச்சயம் உண்டு. அவை ஒருநாள் உங்களின் வலிகளுக்கு மருந்திடும். இன்றையக் கடமைகளை நாம் எவ்வளவு சிறப்பாகச் செய்கிறோமோ, அதுவே நாளையத் திட்டமிடுதலுக்கு தகுந்த முன்னேற்பாடு. எனவே, ஒவ்வொரு நாளையும் சிறந்த நாளாக ஆக்குங்கள். இவ்வாறு அனுகீர்த்தி வாஸ் அவர்கள், அந்த இறுதிச்சுற்றுப் போட்டியில், தன் அனுபவத்தைப் பதிலாகச் சொன்னார். இந்தப் பதிலே, அனுகீர்த்தி அவர்களுக்கு, மிஸ் இந்தியா’ என்ற பட்டத்தை வென்று தந்தது என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

ஒருமுறை, கேப்டன் விராட் கோலி அவர்கள், இந்திய கிரிக்கெட் அனுதாபிகளை இவ்வாறு கேட்டுக்கொண்டார். முதல் டெஸ்ட் தோல்வியையடுத்து, உடனே அணியைப்பற்றி முடிவு கட்டிவிட வேண்டாம். இங்கு நமக்கு நிதானமும் பொறுமையும்தான் அவசியமே தவிர, கோபம் அல்ல. வெளியிலிருந்து பார்க்கும்போது தோல்வி மோசமானதாகத் தெரியும் என்று விராட் கோலி அவர்கள் சொல்லியுள்ளார். உண்மைதான், தோல்விகள் கற்றுக்கொடுக்கும் பாடங்களைப்போல், வெற்றிகள் கற்றுத்தருவதில்லை. தோல்விகளே வெற்றிக்குச் சிறந்த படிகள்.

அமெரிக்க ஆசிரியப் பெண்மணி

அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஓர் ஆசிரியப் பெண்மணியின் வாழ்வில் நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது. இவர், பெரிய கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பதே, இவரது வாழ்வின்  இலட்சியமாக இருந்தது. நீயோ ஒரு சாதாரண ஆசிரியர், நீ எப்படி அவ்வளவுப் பணத்தை சம்பாதிக்க முடியும்’ என்று, பலர் அவரைக் கேலி செய்துகொண்டு இருந்தனர். ஆனால், தன்னுடைய இலட்சியத்தில் மட்டும் தெளிவாக இருந்த அவரது வாழ்விலும் விதி விளையாடியது. ஒரு நாள் இவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில், இவர் தன் வாழ்நாள் எல்லாம், சக்கர நாற்காலியில் அமரவேண்டிய நிலைமையாகிவிட்டது. அந்த நிலையிலும், அந்தப் பெண்மணி ‘என் உடல்தான் முடங்கிவிட்டது. உள்ளம் முடங்கவில்லையே. நிச்சயம் இந்த வாழ்வில் என்னுடைய இலட்சியத்தை அடைந்தே தீருவேன்’ என்று தீர்க்கமாக இருந்தார். இப்படி வாழ்ந்துகொண்டிருந்தபோது, இந்த நாற்காலி வசதியாக இல்லை. நல்ல வசதியான ஒரு நாற்காலியை நாம் ஏன் தயாரிக்கக் கூடாது என்ற எண்ணமும் இவருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இதையே ஒவ்வொரு நாளும் சிந்தித்து, இறுதியில், ஓர் அற்புதமான சக்கர நாற்காலியை இவர் உருவாக்கினார். அந்த நாற்காலியில் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்து, கடைசியில், இரண்டு மூன்று வகைகளில் அவற்றைத் தயாரித்து மக்களிடம் சோதனைக்கு அனுப்பினார். இவை மிக அற்புதமாக இருக்கின்றன என்று, புதிய சக்கர நாற்காலிகள் கேட்டு விண்ணப்பங்கள் வரத்தொடங்கின. அந்தப் பெண்மணி, இவற்றை தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கக் கொடுத்தார். அந்த சக்கர நாற்காலி தயாரிப்பு தொழில் வழியாகப் படிப்படியாக வளர்ந்து, பெரிய கோடீஸ்வரர் ஆனார், அந்த அமெரிக்க ஆசிரியர்.

வாழ்வில் வலிகளை வழிகாட்டிகளாக அமைத்துக்கொண்ட பலர் இவ்வாறு சொல்கிறார்கள். முள் குத்தாமல் ரோஜாவைப் பறிக்க முடியுமா? தேனீ கொட்டுமே என்று பயந்து, தேன்கூட்டை நெருங்காமல் இருந்தால் தேன் கிடைக்குமா?  வாழ்வில் எதிரி என்று ஒருவர் இல்லாவிட்டால் அதில் வெற்றிபெற முடியுமா? இருண்ட மேகத்தில்தானே வானவில் தோன்றும். உங்களைத் தோற்கடிக்க முயற்சிக்கும் எதிரியின்முன், உங்களுடைய சோகத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாதீர்கள், உங்கள் மனதைக் கவலை கவ்வியிருந்தாலும், உங்கள் உதடுகளில் புன்னகை தவழட்டும் என்று இவர்கள் மற்றவரை உற்சாகப்படுத்துகிறார்கள்.

“தோல்வியே நீ என் ஆசான். உன்னை வைத்துதான் நான் என்னையே அளவிட்டேன்... நீ என்னை ஒவ்வொரு முறையும் தழுவும்போதெல்லாம் என் சிந்தனைக்கும் செயலுக்கும் ஞானம் கூட்டப்பட்டது... உன்னைப் பொறிவைத்துதான் வெற்றியெனும், அவனுக்கு குறிவைக்கிறேன்... இத்தனை உதவிகள் நீ செய்தாலும் இந்த உலகம் உன்னை புகழ்வதில்லை, இகழவே செய்கிறது... கனிந்த பழங்களை ருசித்து உண்பவர்கள், மரத்தின் வேரை நினைத்துப் பார்ப்பதில்லை. நீ வேரானவன், ஆனால் மக்கள் பார்வையில் வேறானவன்... நான் வெற்றியெனும் அவனைப் பற்றினாலும் உன்னையும் மறப்பதுண்டோ, மறந்தால் வெற்றி நிலைப்பதுண்டோ” என்று செல்வமுத்து மன்னார்ராஜ் என்பவர் இணையத்தில் பதிவுசெய்திருக்கிறார் (eluthu.com). ஆம், தோல்விகளும், வலிகளும் கற்றுத்தரும் பாடங்கள் அற்புதமானவை, நிரந்தரமானவை. தோல்வி போல் வெற்றிப் பாதையைச் சொல்லித்தருவது எதுவுமே கிடையாது. அதேநேரம் வெற்றி போதை தரும், கிளர்ச்சியூட்டும், அது காலை வழுக்கிவிட்டுவிடும். தோல்விகள் நம்மைக் காயப்படுத்தினாலும், அவை அவற்றிற்கு நிச்சயம் ஒருநாள் மருந்திடும். எனவே வலிகளையும் தோல்விகளையும் வாழ்வுக்கு, அதிலும் குறிப்பாக, இந்த கோவிட்-19  காலத்தில், நம் வாழ்வுக்கு வழிகாட்டிகளாக அமைத்துக்கொள்வோம்.

13 July 2020, 14:20