தேடுதல்

Vatican News
ஒரு காலத்தில் பிச்சை எடுத்த சிறுவன் கண்ணதாஸ் ஒரு காலத்தில் பிச்சை எடுத்த சிறுவன் கண்ணதாஸ்  

வாரம் ஓர் அலசல்: வலிமையுள்ள மனிதராக வாழ்ந்து காட்டுங்கள்

வெற்றி என்பது மோசமான ஆசிரியர், தோல்வியே அதிகம் கற்றுத்தரும் ஆசிரியர்

மேரி தெரேசா: வத்திக்கான்

வாட்சப் என்ற புலனத்தில் அண்மையில் ஒரு நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தமிழக இளைஞன் ஒருவன் படிப்பில் மிகவும் திறமைசாலி. அறிவியல் பாடத்தில் அவன் எப்போதும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்தான் எடுப்பான். அவன் சென்னை IIT தொழில்நுட்ப (Indian Institute of Technology Madras) நிறுவனத்தில் மிக உயர்ந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான். பின்னர், அமெரிக்க ஐக்கிய நாட்டு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தொழில் மேலாண்மைக் கல்வி பயிலச் சென்றான். அங்கும் படிப்பை வெற்றியுடன் முடித்தான். அந்நாட்டிலே நல்ல ஊதியத்தில் வேலை ஒன்றும் அவனுக்குக் கிடைத்தது. அங்கேயே வாழ்வைத் தொடங்கினான். பெற்றோர், ஓர் அழகான தமிழ்ப்பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஐந்து அறைகள் கொண்ட ஒரு பெரிய வீட்டையும், ஆடம்பர கார் ஒன்றையும் வாங்கினான். அவனது வாழ்வு மிகச் சிறப்பாக, வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்குமுன், அவன், தன் மனைவி மற்றும் பிள்ளைகளைச் சுட்டுக்கொன்றுவிட்டு, அவனும் தற்கொலை செய்துகொண்டான். இவனது மரணம் குறித்து ஆய்வு நடத்த விரும்பிய கலிஃபோர்னிய உளவியல் ஆய்வு நிறுவனம், அவனின் நண்பர்கள் மற்றும் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, அவனைப் பற்றிக் கேட்டது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியில் அவன் வேலை இழந்தான். அதனால் அவன் நீண்டகாலம், வேலையின்றி இருக்கவேண்டிய சூழல் உருவானது. தான் செய்துகொண்டிருந்த வேலையில் கிடைத்த ஊதியத்தைவிட குறைந்த ஊதியத்திற்குக்கூட அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் அவன் தவணை முறையில் வாங்கிய வீட்டிற்கும் பணத்தைச் செலுத்த முடியவில்லை. அவனது குடும்பம் வீட்டை இழந்தது. மீதமிருந்த குறைந்த பணத்தில் சிறிது நாள்கள் அவனது குடும்பம் வாழ்ந்தது. இறுதியில் அவனும் அவனது மனைவியும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்தனர். அவன் முதலில், தன் மனைவியையும், குழந்தைகளையும் சுட்டுக்கொன்றான். பிறகு தானும் தற்கொலை செய்துகொண்டான். அந்த நிறுவனம், இறுதியில் தன் ஆய்வின் முடிவை இவ்வாறு எழுதி வைத்தது. இந்த மனிதர் வெற்றி என்பதை மட்டுமே தன் சிந்தனையிலும், மனதிலும், பதிவுசெய்து வைத்திருந்தார். தோல்வியை எவ்வாறு கையாள்வது, தோல்வியில் எவ்வாறு வாழ்வது என்பதற்கு அவர் பயிற்சிபெறவில்லை.

வாழ்வில் சிகரத்தை எட்டிய மனிதர்களில் ஏறத்தாழ எல்லாருமே தோல்விகளைக் கையாளும் முறைகளைக் கற்றுக்கொண்டவர்கள். வெற்றி என்பது மோசமான ஆசிரியர், தோல்வியே அதிகம் கற்றுத்தரும் ஆசிரியர் என்பதை, அவர்கள் அனுபவத்தால் உணர்ந்தவர்கள். தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடி காலத்தில், இது சிந்திக்கவேண்டிய நல்லதொரு கூற்று.

மாணவி தெய்வானை

தமிழகத்தில் அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வில், மதுரையில் குடுகுடுப்பையைப் பயன்படுத்தி குறிசொல்லும் சமுதாயத்தைச் சேர்ந்த தெய்வானை என்ற மாணவி, பசியின் வலியை தோற்கடித்து 600க்கு 500 மதிப்பெண்கள் வாங்கி, சாதித்து காட்டியுள்ளார். அவர் பயின்ற திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் முதலிடத்தை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் ஏறத்தாழ ஐம்பது குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வாழாமல் பயணம் செய்வது அல்லது ஒரு சில மாதங்கள் மட்டும் ஓரிடத்தில் தங்குவது என நாடோடி சமுதாயமாக உள்ளனர். தனது படிப்பு பற்றிக் கூறியுள்ள மாணவி தெய்வானை, ''என் சமுதாயத்தில் பெண்கள் பள்ளிப்படிப்பை முடிப்பது அரிதுதான். நான் ஒரு தொடக்கமாக இருக்க விரும்புகிறேன். நான் பி.காம் படிக்கப்போகிறேன். வங்கியில் வேலைசெய்வது என் கனவு. என் சமுதாய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும். நேர்மையாக உழைத்து வாழவேண்டும் என்பதுதான் என் சமுதாயத்திடம் நான் கற்றுக்கொண்ட பாடம். குறி சொல்லுவதில் எங்களுக்கு கிடைக்கும் வருமானம் கொஞ்சம்தான். அதனால் பசியின் வலி எனக்குத் தெரியும். பல ஊர்களுக்கு பசியோடு நடந்து சென்றிருக்கிறேன். நான் படிக்கும் படிப்பு என்னை முன்னேற்றும் என்ற நம்பிக்கையில் படித்தேன் என்று சொல்லியுள்ளார். ஒய்வு நேரங்களில் கூடைகள் முடைந்து தனது படிப்புக்குப் பணம் சேர்த்திருக்கிறார் தெய்வானை.

ஒரு காலத்தில் பிச்சை எடுத்த சிறுவன் கண்ணதாஸ் இன்று...

ஒரு காலத்தில் பிச்சை எடுத்த சிறுவன் கண்ணதாஸ், இன்று, தெருச்சிறார் உலக கோப்பை கால்பந்து அணியில் உலகப் புகழ்பெற்றவராக உயர்ந்துள்ளார். Josh Talks என்ற யூடியூப்பில் இவர் தனது வாழ்வு பற்றி (ஏப்ரல் 2018) இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

என் பெயர் கண்ணதாஸ். எனது சொந்த ஊர் வாணியம்பாடி. எனது அப்பா ஒரு குடிகாரர். தினமும் குடித்துவிட்டு வந்து என் அம்மாவையும் என்னையும் அடிப்பார். அப்பா அம்மாவுக்கிடையே தினமும் சண்டை நடக்கும். ஒருநாள் எனது அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகொண்டது தெரியவரவே வீட்டில் சண்டை வலுத்தது. அதனால் ஒருநாள் இரயில் நிலையம் வந்தேன். நான் சிறுவனாக இருந்ததால் எந்த இரயில் எந்தப் பக்கம் போகிறது என எனக்குத் தெரியாது. அதனால் அப்போது வந்த இரயிலில் ஏறினேன். அது பெங்களூர் போனது. இரவானது. பசி வயிற்றைக் கிள்ளியது. இரயில் நிலைய உணவகம் ஒன்றில், இரவு 12 மணியானதும் மீதம் இருந்த உணவை மற்றவருக்குக் கொடுத்தார்கள். அப்படி எனக்கும் சாப்பாடு கிடைத்தது. இப்படியே ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் போகும் இரயிலாகப் பார்த்து ஏறுவேன். இரவில் சீட்டுக்கு அடியில் படுத்துக்கொள்வேன். இரவு 12 மணிக்கு இரயிலிலிருந்து இறங்குவேன். கிடைக்கும் உணவைச் சாப்பிடுவேன். மழையும் குளிரும் வாட்டும். ஒருநாள் டிக்கெட் பரிசோதகர் வந்து என்னை இரயிலிலிருந்து இறக்கிவிட்டார். பின் எதிர் திசையில் போகிற இரயிலில் ஏறினேன். அந்த இரயிலில் ஒரு பாட்டியிடம், பாட்டி எனக்குப் பசிக்குது, காசு இருந்தா கொடு என்று கேட்டேன். அதற்கு அந்த பாட்டி, நானே பிச்சை எடுக்கிறேன், நீ பிச்சை எடுக்கவேண்டாம், என்னோடு கூடவந்து நில், உனக்கு காசு கொடுத்துடறேன் என்றார்கள். அந்தப் பாட்டிக்கு ஒரு கையில் விரல்கள் கிடையாது. அந்தப் பாட்டி ஒரு கையால் தரையைக் கூட்டிவிட்டு, அடுத்த கையால் காசு கேட்பார்கள். அந்தக் காசை நான் வைத்துக்கொள்வேன். பின் இரயிலைவிட்டு இறங்கும்போது அந்த பாட்டி பத்து ரூபாயை என் கையில் கொடுத்துவிட்டு, சாப்பாடும் வாங்கிக் கொடுப்பார்கள். இப்படி போய்க்கொண்டிருந்தபோது, ஒரு நாள் காவல்துறை என்னை இரயிலிலிருந்து இறக்கி இப்படி வாழக் கூடாது என்று அடித்தார்கள். அப்பா அடிக்குப் பயந்து இங்கே வந்தால், இங்கேயும் அடிக்கிறார்களே, எப்படியாவது வெளியே போய் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு டீ கடையில் டம்ளர்களைக் கழுவும் வேலை கிடைத்தது. தினமும் காலையிலிருந்து இரவு 10 மணி வரை விடாது வேலை இருக்கும். மதியம் ஒருவேளை சாப்பாடும், பத்து ரூபாயும் கொடுப்பார்கள். ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம்தான் தூங்குவேன். இப்படி ஒரு மாதம் வேலை செய்தேன். இங்கு சாப்பாடும் பணமும் போதவில்லை. எனவே மீண்டும் முன்புபோல் இரயிலில் நான்கு மாதங்கள் பயணம் மேற்கொண்டேன். சாப்பாடு எல்லா நேரமும் கிடைக்காது. பசிக்கும். அந்த இரயிலில் கைகழுவும் குழாய்த் தண்ணீரைக் குடிப்பேன். அதிலே எனது சட்டையைத் துவைத்து அப்படியே ஈரத்தோடு போட்டுக்கொள்வேன். இப்படி இருக்கும்போது ஒரு நாள் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்தேன். அது சென்னை என்றே எனக்குத் தெரியாது. அங்கு கருணாலய அமைப்பின் அலுவலகர்கள் என்னை விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். முதலில் சாப்பாடுதான் கேட்டேன். பின் சிலநாள்கள் சென்று என்னைப் படிக்கப்போகச் சொன்னார்கள். நான் வேலைக்குத்தான் போவேன் என்று சொன்னதும், இந்த வயதில் வேலை செய்ய முடியாது, நீ படிக்கவேண்டும் என்று சொன்னார்கள். முதல் நாள் பள்ளிக்குச் சென்றேன். அங்கும் ஆசிரியர் அடித்தார். பையை அங்கேயே வைத்துவிட்டு விடுதிக்கு வந்துவிட்டேன். ஆசிரியர் அடிக்கமாட்டார் என்று சொல்லி, என்னை திரும்பவும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். எனக்கு விளையாட்டில், அதிலும் கால்பந்தில் அதிக ஆர்வம். படிக்கப் போனால்தான் கால்பந்து சொல்லித் தருவேன் என்று சொன்னதால், பள்ளிக்குத் தொடர்ந்து சென்றேன். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கினேன். பிளஸ் 2 படிப்பையும் முடித்தேன். பின் வானொலியியல் கல்வியில் சான்றிதழ் படிப்பு முடித்தேன். என்னைப்போன்ற சிறாருக்கு கால்பந்து சொல்லித்தரவேண்டுமென்று, அதற்கு எனக்கும் பயிற்சி கொடுத்தார்கள். அச்சமயத்தில் தெருச்சிறார் உலக கோப்பை விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் நன்றாக விளையாடி, இந்திய அணிக்குத் தலைவனாக இருந்தேன். 2014ம் ஆண்டில் ரியோ நகரில் தெருச்சிறார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. என்னைப்போன்ற தெருச்சிறாரின் வாழ்வை முன்னேற்றுவதே எனது இலட்சியம். பல்வேறு காரணங்களால் வீட்டைவிட்டு வெளியே ஓடிவரும் சிறுவர்களை, சென்னை இரயில் நிலையத்தில் மீட்கும் வேலையை இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன்.

பிச்சை எடுத்த நான் சாதித்துவிட்டேன், அப்படியானால் நீங்கள் என்று கேட்கிறார், கண்ணதாஸ். பூமியில் விதைக்கப்பட்ட விதைகூட எதிர்ப்பை சமாளித்து, முளைத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற மான்கூட பிரச்சனைகளைச் சமாளிக்கின்றது. பெரிய மீன்களால் உணவுக்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன. மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்வை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. ஒவ்வொரு நாளும் உணவுக்காக பல கிலோ மீட்டர்கள் தூரம் பறக்கவேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன. தண்ணீரே இல்லாத பாலைநிலத்தில் உயிர் வாழவேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும் எங்கும் ஓடிப்போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன. ஒரு நாள் மட்டுமே வாழ்வு என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன. (நன்றி இணையதளம்) எனவே, மனமே, நீ மட்டும் தோல்விகள் கண்டு துவண்டு விடலாமா, வாழ்ந்து காட்டு, வலிமையுள்ள மனிதனாக, வெற்றி உன் கையில் என்று, தோல்விகளில் துவண்டுவிடாமல் வெற்றிப்படிகளில் கால் பதிப்போமா.

வாரம் ஓர் அலசல்: வலிமையுள்ள மனிதராக வாழ்ந்து காட்டுங்கள்
27 July 2020, 14:33