தேடுதல்

Vatican News
அந்தோனியோ கூட்டேரஸ். அந்தோனியோ கூட்டேரஸ்.  (AFP or licensors)

2019ல் மட்டும் ஐ.நா.நிறுவனம் 77 பணியாளர்களை இழந்துள்ளது

நெருக்கடியான மற்றும், பதற்றம் மிகுந்த சூழல்களில், ஐ.நா.வின் நீலநிறக்கொடியுடன் துணிவுடன் பணியாற்றியவர்களை, நினைவுகூர்ந்து, பாராட்டிய ஐ.நா. நிறுவனத்தின் பொதுச்செயலர் கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

போரின் கொடுமைகளிலிருந்து வருங்காலத் தலைமுறைகளைக் காப்பாற்றவும், சுதந்திரமான சூழலில், அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கைத் தரத்தை அமைத்துக்கொடுக்கவும் பணியாற்றிய நேரங்களில் உயிரிழந்த ஐ.நா. நிறுவனத்தின் வீரம்நிறைந்த பணியாளர்களுக்கு தன் அஞ்சலியை செலுத்தியுள்ளார், அந்நிறுவனத்தின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்.

ஐ.நா. நிறுவனம் தனது 75வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இவ்வாண்டில், நெருக்கடியான மற்றும், பதற்றம் மிகுந்த சூழல்களில், ஐ.நா.வின் நீலநிறக்கொடியுடன் துணிவுடன் பணியாற்றிய ஐ.நா. பணியாளர்களை, ஜூன் 30, இச்செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்வில் நினைவுகூர்ந்து, பாராட்டினார் கூட்டேரஸ்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா. நிறுவனம் தன் பணியாளர்களைக் காப்பாற்றவும், அவர்கள் மீது அக்கறை செலுத்தவும் தொடர்ந்து செயல்படும் என்றும் உறுதி கூறினார்.

மேலும், ஐ.நா. பணியாளர்கள், போர் மற்றும், பேரிடர்கள் இடம்பெறும் இடங்களில், மக்களைக் காப்பாற்றுவதற்கு உழைத்துவரும்வேளை, 2019ம் ஆண்டில் மட்டும்  ஐ.நா. நிறுவனம், தன் பணியாளர்களில் 77 பேரை இழந்துள்ளது எனவும், இந்த இழப்பு, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது எனவும், இந்நிகழ்வில் கூறினார், ஐ.நா. அதிகாரி Patricia Nemeth,

தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த தன் வீரர்களை இந்த நாளில் நினைவுகூர்வது என்ற புனிதமான கடமையை, ஐ.நா. நிறுவனம் கொண்டுள்ளது என்றும், இந்நிகழ்வில் உரையாற்றினார், Nemeth. (UN)

01 July 2020, 14:36