தேடுதல்

Vatican News
குதிரை சிலை குதிரை சிலை 

விதையாகும் கதைகள் : எந்த யுகத்தில் இருக்கிறோம்?

மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் சந்தைக்குள் ஒருநாள் நுழைந்தபோது, அழகான குதிரை ஒன்றைப் பார்த்தார். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, “குதிரை என்ன விலை? என்று கேட்டார்.
குதிரையின் உரிமையாளரோ, “ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்” என்றார்.
அர்ஜுனனும் உடனே, “சரி கேள்வியைச் சொல்லுங்கள்” என்றார்.
“ஐயா! ஒரு வயல் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல்காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்” என்று கூறினார் குதிரையின் உரிமையாளர். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. சிந்தித்தபடியே வீட்டிற்கு வந்து, தன் அண்ணன் தர்மரிடம் அதே கேள்வியைக் கேட்டார், அர்ஜுனன். அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள். தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்..
“தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஆபத்துக்களை, அந்த கேள்வி சொல்கின்றது. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது” என்று சொல்லி முடித்தார் தர்மர்.
கலியுகத்தில், உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது, மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

 

01 July 2020, 14:56