தேடுதல்

இரந்துண்பவர் ஒருவர் இரந்துண்பவர் ஒருவர்  

விதையாகும் கதைகள் : இரந்துண்பவரும் தங்க நாணயமும்

இலட்சியத்தை நோக்கமாகக்கொண்டு, அறிவுப்பூர்வமாக வளர்த்துக்கொள்வது, ஆசை. தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டு, அழிவை நோக்கி இட்டுச்செல்வது, பேராசை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப்பிடித்த தலைமுடியோடு, இரந்துண்டு வாழ்ந்த ஒருவர், உணவுக்காக, வீடு வீடாக அலைந்தார். ஒரு பழைய கோணிப்பையே அவரது உடமையாக இருந்தது. ஒரு வீட்டின் முன் போய் நின்று எதுவும் கிடைக்காததால், "வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்...", என்று கூறிவிட்டுச் சென்றார். இன்னொரு வீட்டுக்குப் போனபோதும் உணவு கிடைக்கவில்லை. "இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல், அவற்றை இரண்டு மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும், திருப்தி கொள்வேன். அதிக ஆசைப்படமாட்டேன்!" என்று அந்த இரந்துண்பவர் சொன்னதும், தேவதை ஒன்று, அவர்முன் தோன்றியது. "நான் உனக்கு உதவப்போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள் தங்கநாணயங்களைப் போடுகிறேன், உனக்கு எவ்வளவு வேண்டுமோ, பெற்றுக்கொள்", என்றது தேவதை. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது தேவதை சொல்லியது, "கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால், தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை...", என்று.
இரந்துண்பவர், மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். தேவதை மீண்டும் எச்சரித்துவிட்டு, பின்னர், இரந்துண்பவரின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும், தேவதை, தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. "உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?" என்றது தேவதை. "போதாது. இன்னும் வேண்டும்" என்றார் இரந்துண்பவர். தேவதை, மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, "உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது" என்று சொன்னது. இரந்துண்பவரோ, "இன்னும் கொஞ்சம் வேண்டும்" என்று கேட்டார். தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, "உன் கோணிப்பை கிழியப்போகிறது...", என்று எச்சரித்தது. இரந்துண்பவர் மறுத்தார். "இல்லை, நீ இன்னும் கொஞ்சம் நாணயங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்" என அவர் சொன்ன மறுவினாடியே கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் அனைத்தும் கீழே விழுந்து, தூசியாயின. தேவதையும் மறைந்திட, இரந்துண்பவர் திகைத்து நின்றார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2020, 13:34