தேடுதல்

Vatican News
சாலையோரத்தில் இரந்துண்ணும் ஒருவர் சாலையோரத்தில் இரந்துண்ணும் ஒருவர் 

விதையாகும் கதைகள் : கொடைவள்ளல் யார்?

தானமோ, அன்போ, நம் மனதின் ஆழத்திலிருந்து எழுவதாக, முழுமையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவைகளின் உண்மை மதிப்பு வெளிப்படும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அர்ஜுனனுக்கு, கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டார்.

கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்துவிட்டால், நான் உன்னை கர்ணனைவிட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,'' என்றார்.

அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தார். எவ்வளவோ முயற்சிசெய்தும் அவரால் அன்று மாலைக்குள் பாதி அளவுகூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை.

அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே, கண்ணன் அவரை அழைத்து, ''கர்ணா, இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்துவிட வேண்டும், உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.

கர்ணனும், ''இது என்ன பெரிய வேலையா?'' என்று கூறிக்கொண்டே அந்தப் பக்கம் வந்த வறியவர் இருவரை அழைத்தார். அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும் இந்த தங்க மலையை தானம் அளிக்கிறேன். வெட்டி உபயோகித்துக் கொள்ளுங்கள்,''என்று கூறியபடியே சென்று விட்டார்.

அப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார், ''இப்போது உனக்கு வேறுபாடு தெரிகிறதா? உனக்கு,  முழுமையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கடைசிவரை வரவில்லை".

தானமோ, அன்போ, நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை.

22 July 2020, 14:05