தேடுதல்

மருத்துவமனையில் மருத்துவர்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள் 

விதையாகும் கதைகள் : வாழ்வைப் பறிக்க பல வழிகள்

இளையவரின் வாழ்வைக் காப்பாற்றக்கூடிய ஒரே வாய்ப்பை, அவரது தந்தையே பறித்துவிட்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

சிக்காகோ நகரில், புகழ்பெற்ற மருத்துவர் லியோ வின்டர்ஸ் அவர்கள், தன் இல்லத்தில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். நள்ளிரவில், அவரது படுக்கையருகே இருந்த தொலைப்பேசி ஒலித்தது. மருத்துவமனையிலிருந்து வந்த அந்த அழைப்பு, மருத்துவரை உடனே புறப்பட்டு வரச்சொன்னது. இளையவர் ஒருவர் விபத்தில் சிக்கி, மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவரை, மருத்துவர் வின்டர்ஸ் மட்டுமே காப்பாற்றமுடியும் என்பதால், அவரை நள்ளிரவில் அழைத்திருந்தனர்.

தான் வழக்கமாச் செல்லும் சாலையில் சென்றால் நேரமாகும் என்பதால், மருத்துவர் வின்டர்ஸ் அவர்கள், மாற்றுப்பாதையில் சென்றார். அவர் சென்ற பகுதியில், வழிப்பறி கொள்ளை போன்ற ஆபத்துக்கள் இருந்தாலும், இளையவர் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில், அவ்வழியில் காரை ஒட்டிச்சென்றார். சாலை சந்திப்பு ஒன்றில், சிவப்பு விளக்கில், காரை நிறுத்த வேண்டியிருந்தது. அப்போது, திடீரென அங்கு வந்த ஒரு மனிதர், துப்பாக்கியைக் காட்டி, மருத்துவரை காரிலிருந்து இறங்கும்படி கத்தினார். மருத்துவர் வின்டர்ஸ் அவர்கள், அவரிடம், தன் நிலைமையைச் சொல்ல முயன்றார். ஆனால், வந்திருந்தவர், அவர் கூறியதை சிறிதும் கேட்காமல், அவரை காரிலிருந்து வெளியேற்றிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு பறந்தார்.

அடுத்த அரை மணி நேரம், மருத்துவர் வின்டர்ஸ் அவர்கள், அங்குமிங்கும் அலைந்து, இறுதியில், அங்கு வந்த ஒரு 'டாக்சி'யில் ஏறி, மருத்துவமனையை அடைந்தார். அவரைச் சந்தித்த 'நர்ஸ்', இளையவர், 10 நிமிடங்களுக்கு முன் இறந்துவிட்டதாகக் கூறினார்.

மகன் இறப்பதற்குமுன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த அவரது தந்தை, மருத்துவர் ஏன் இன்னும் வரவில்லை என்று கத்திக்கொண்டிருந்ததாகவும், அவர், அடுத்த அறையில் அமர்ந்துள்ளதாகவும் நர்ஸ் கூறினார். அவரிடம் தன் நிலையை விளக்கிக் கூறலாம் என்ற எண்ணத்துடன், அடுத்த அறைக்குள் நுழைந்த மருத்துவர் வின்டர்ஸ் அவர்கள், அந்த மனிதரைக் கண்டதும் அதிர்ச்சியுற்றார். சாலையில், அவரிடமிருந்து காரைப் பறித்துக்கொண்டு சென்றவர், அங்கு அமர்ந்திருந்தார். அந்த மனிதரும், மருத்துவரைக் கண்டதும், அதிர்ச்சியில் உறைந்தார்.

இளையவரின் வாழ்வைக் காப்பாற்றக்கூடிய ஒரே வாய்ப்பை, அவரது தந்தையே பறித்துவிட்டார்.

21 July 2020, 14:48