தேடுதல்

Vatican News
நேபாள புத்த மடாலயம் நேபாள புத்த மடாலயம்   (AFP or licensors)

விதையாகும் கதைகள்: பயனற்றவர்கள் என்று எவருமே கிடையாது

இந்தப் பூமியில் இருப்பவற்றை, பயனுள்ளவை பயனற்றவை என்று பிரிப்பது மனிதரின் குறுகிய மனதின் வெளிப்பாடு.

மேரி தெரேசா: வத்திக்கான்

Shuang Shu என்ற சீன ஞானியிடம், குய்க்ஸ் ஷூ என்ற துறவி சென்று, உங்கள் போதனைகளில் பெரும்பாலானவை பயனற்றவை பற்றியே இருக்கின்றனவே, அது ஏன் என்று கேட்டார். அதற்கு அந்த ஞானி, பயனற்றதன் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவில்லை என்றால், பயனுள்ளவற்றின் மகத்துவம் உங்களுக்குத் தெரியப்போவதில்லை என்று சொன்னார். இன்னும் சொல்லப்போனால், பயனுள்ளவை அவ்வாறு இருப்பதற்கு காரணமே பயனற்றவைதான், எடுத்துக்காட்டாக, நாம் வாழ்கின்ற இந்த பூமியின் நிலப்பரப்பில் மனிதருக்குப் பயனுள்ளவையாக இருப்பது, ஒரு சிறிய பகுதி மட்டுமே. ஒருவேளை, இந்த பயனற்ற பகுதிகள் அனைத்தும் பூமியிலிருந்து அகற்றப்பட்டால் என்ன ஆகும் என்று கேட்டார். அதற்கு அந்த ஞானியிடம் கேள்வி கேட்ட குய்க் ஷூ அவர்கள், பயனற்ற பகுதிகள் அனைத்தும் அகற்றப்பட்டால், பயனுள்ள பகுதிகள் அனைத்தும் தங்களது தனித்துவத்தை இழந்துவிடும் என்று சொன்னார். உண்மைதான். நாம் எதை பயனற்றது என்று கருதுகிறோமோ, அது உண்மையிலேயே பயனற்றது அல்ல என்று சொன்னார் சீன ஞானி Shuang Shu.

இன்றைய சிந்தனை (20195) என்ற தலைப்பில், இந்த நிகழ்வை விளக்கியவர், அதையொட்டிய தனது சிந்தனையையும் இவ்வாறு வழங்கியுள்ளார். நம் பயன்பாட்டைப் பொருத்தவரை, அரிசி உயர்ந்தது, உமி தாழ்ந்தது. ஆனால் அரிசியை மட்டும் நிலத்தில் விதைத்தால் அது முளைக்காது. அதற்கு உமியின் துணை தேவைப்படுகிறது. அரசியும் உமியும் சேர்ந்து அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன. ஆம். இந்தப் பூமியில் இருப்பவற்றை, பயனுள்ளவை பயனற்றவை என்று பிரிப்பது மனிதரின் குறுகிய மனதின் வெளிப்பாடு. எனவே இயற்கையை அதன் நிலையிலே வைத்துப் பார்க்க நாம் கற்றுக்கொள்வது அவசியம். அதேபோல் மனிதர்களிலும் யாரையும் பயனற்றவர்கள் எனச் சொல்வது சரியல்ல. அவ்வாறு சொல்லவும் கூடாது. ஆள்பார்த்து செயல்படுபவர் அல்ல நம் கடவுள்.

16 July 2020, 12:52