தேடுதல்

Vatican News
பூங்காவின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் சிறுவனும் பெண்மணியும் பூங்காவின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் சிறுவனும் பெண்மணியும் 

விதையாகும் கதைகள் : பூங்காவில் சந்தித்தக் கடவுள்

முன்பின் தெரியாதவர்களிடத்திலும், பரிவுடன், அன்புடன், நடந்துகொள்ளும்போது, ஒருவர் கண்ணில் மற்றொருவர் கடவுளாய் மாறக்கூடும். நன்மைகள் செய்யும் வேளையில், நமக்குள் உறைந்திருக்கும் கடவுள் வெளிப்படுவார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கடவுளை எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் என்ற ஆவலுடன், சிறுவன் இராபர்ட், வீட்டிலிருந்து கிளம்பினான். மதிய உணவையும், இன்னும் சில பலகாரங்களையும், பானங்களையும் பையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். போகும் வழியில், இருந்த பூங்காவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று, அங்கு சென்றான். பூங்காவில், வயதுமுதிர்ந்த பெண்மணி ஒருவர், ஒரு பெஞ்சில் அமர்ந்து, பறவைகளுக்கு உணவளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தான்.

வெயிலில் நடந்துவந்ததால் தாகம் எடுக்கவே, சிறுவன் இராபர்ட், தன்னிடமிருந்த குளிர்பான பாட்டிலை திறந்தான். அப்பெண்மணி அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவேளை, பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றெண்ணி, பையிலிருந்த மற்றொரு குளிர்பான பாட்டிலை அவரிடம் நீட்டினான். பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு, அந்த குளிர்பானத்தைக் குடித்தார்.

சிறுவன் இராபர்ட், அதுவரை அவ்வளவு அழகான புன்னகையைப் பார்த்ததில்லை.  மறுபடியும் அப்பாட்டியின் புன்னகையைப் பார்க்க விரும்பிய இராபர்ட், தான் கொண்டு வந்த பலகாரங்களைப் பிரித்துக்கொடுத்தான். பாட்டி, மீண்டும் அவனைப் பார்த்து புன்னகை செய்தவண்ணம், பலகாரங்களைச் சாப்பிட ஆரம்பித்தார்.

இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், அடிக்கடி, ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர். நேரமானதும், அம்மா ஞாபகம் வந்தது இராபர்ட்டுக்கு. வீட்டுக்குப் பறப்பட்டான். சிறிது தூரம் சென்றவன், திரும்பிச்சென்று, பாட்டியைக் கட்டியணைத்தான். பாட்டி, அவன் நெற்றியில் முத்தமிட்டு, ஒளிமயமானப் புன்னகை பூத்தார்.

வீட்டிற்குள் நுழைந்த இராபர்ட், மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்ததைக்கண்ட அவன் அம்மா என்ன நடந்ததென்று கேட்டார். ’நான் பூங்காவில் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றான் இராபர்ட். கடவுள் ஒரு பெண் என்றும், கடவுளின் புன்னகையைப்போல் தான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றும் இராபர்ட், தன் அம்மாவிடம் சொன்னான்.

அதே நேரம், அந்தப் பாட்டி, அவரது வீட்டில் நுழைந்தபோது, “என்னம்மா, இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள். என்ன நடந்தது?” என்று அவரது மகன் கேட்டார். "இன்று பூங்காவில் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றார், பாட்டி. “அது மட்டும் இல்லை. நான் நினைத்ததை விட, கடவுளுக்கு ரொம்பச் சின்ன வயசு” என்றார்.

முன்பின் தெரியாதவர்களிடத்திலும், பரிவுடன், அன்புடன், நடந்துகொள்ளும்போது, ஒருவர் கண்ணில் மற்றொருவர் கடவுளாய் மாறக்கூடும். நன்மைகள் செய்யும் வேளையில், நமக்குள் உறைந்திருக்கும் கடவுள் வெளிப்படுவார்.

14 July 2020, 14:01