தேடுதல்

Vatican News
ஆமை ஆமை 

விதையாகும் கதைகள்: நாள்தோறும் நல்லன செய்வோம்

மழை, எதையும் எதிர்பார்த்துப் பெய்வதில்லை, காற்று கணக்கிட்டு வீசுவதில்லை. கதிரவனும் எவர்பொருட்டும் உதிப்பதில்லை. அது அவற்றின் இயல்பு. நல்லவர்களின் இயல்பும் அப்படியேதான்

மேரி தெரேசா: வத்திக்கான்

தேள் ஒன்று, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, நடு ஆற்றில் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தது. அது தன் சகாக்களிடம் உதவி கேட்டது. ஆனால் அவை எதுவும் அதற்கு உதவ முன்வரவில்லை. அப்போது அந்த தேளிற்கு உதவுவதற்காக ஓர் ஆமை முன்வந்தது. அந்த ஆமை தேளிடம், நண்பரே, என் முதுகில் ஏறிக்கொள்ளுங்கள், உங்களை நான் கரையில் சேர்த்துவிடுகிறேன் என்று கூறியது. தேளும், எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற ஆவலில், ஆமையின் முதுகில் ஏறி அமர்ந்தது. ஆமை கரை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய சிறிதுநேரத்திற்குள், தேள் தன் குணத்தைக் காட்டத் தொடங்கியது. ஆமையின் முதுகில் அது முதல்முறை கொட்டியபோது, ஆமை அமைதியாக நீந்திக்கொண்டிருந்தது. என்ன, ஆமைக்கு வலிக்கவில்லையே என, தேள் மீண்டும் மீண்டும் கொட்டிப் பார்த்தது. அப்போது ஆமை தேளிடம், என்ன நண்பரே, எனது முதுகில் ஏதோ டொக் டொக் என்ற சப்தம் கேட்கிறது என்று சொன்னது. அதற்கு தேள், அது ஒன்றுமில்லை நண்பரே, உங்களது முதுகு கடினமாக இருக்கிறது, அதுதான் கொட்டிப் பார்க்கிறேன் என்று சொன்னது. ஆமாம், உன்னை உயிரோடு கரை சேர்க்க நான் முயற்சி செய்கிறேன், ஆனால் நீயோ என்னைக் கொட்டிக்கொண்டிருக்கிறாயே, இது நியாயமா? என்று கேட்டது ஆமை. அதற்கு அந்த தேள், ஆமையாரே, அதைப் பற்றிக் கவலைப்படாமல் செல்லுங்கள், இது என்னுடைய குணம் என்று, சர்வசாதாரணமாகக் கூறியது. இந்த கதையை யூடியூப்பில் பதிவுசெய்துள்ள விஜய் சீத்தாராம் என்பவர் சொல்கிறார் – நம் வாழ்விலும் இவ்வாறு நிகழ்வது உண்டு. நம் நல்ல குணத்தால் நன்மைபெற்ற ஒருவர் அதை அலட்சியப்படுத்தலாம், அல்லது நமக்கு எதிராகக்கூட செயல்படலாம். அது அவர்களது இயல்பாகக்கூட இருக்கலாம். ஆனால் நமது உதவி செய்யும் இயல்பு மட்டும் என்றுமே மாறிவிடக் கூடாது. தீயவர்களின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு, நல்லவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டால், நன்றியுணர்வுமிக்க ஒருவர் உண்மையாகவே பிரச்சனையில் இருக்கும்போது, அவருக்கு நல்லவர்களின் கருணை கிடைக்காமல் போய்விடும் ஆபத்து உள்ளது. நல்லவர்களுக்கும், நன்மைபுரிகிறவர்களுக்கும் கிடைக்கின்ற மனநிறைவு, நல்லவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும். மழை, எதையும் எதிர்பார்த்துப் பெய்வதில்லை, காற்றும் கணக்கிட்டு வீசுவதில்லை. கதிரவனும் எவர்பொருட்டும் உதிப்பதில்லை. அது அவற்றின் இயல்பு. நல்லவர்களின் இயல்பும் அப்படியேதான். எனவே நல்லவற்றைத் தொடர்ந்து ஆற்றுவோம். (நன்றி - விஜய் சீத்தாராமின் தமிழ் விடு தூது)

13 July 2020, 14:17