தேடுதல்

Vatican News
சாலையில் பழுதடைந்து நிற்கும் கார் சாலையில் பழுதடைந்து நிற்கும் கார் 

விதையாகும் கதைகள்: உருவுகண்டு குறைத்து மதிப்பிட வேண்டாமே

நாம் உண்மையிலேயே எவ்வளவு பெரிய அறிவியல் மேதையாக இருந்தாலும், வாழ்வில் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன என்ற உணர்வு எப்போதும் இருக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருசமயம், பெரிய பணக்காரர் ஒருவர், புதிதாக வாங்கிய தனது சொகுசு வாகனத்தில், நீண்ட தூரம் தனியே பயணம் மேற்கொள்ள ஆசைப்பட்டு புறப்பட்டார். அவரது வாகனம் நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அந்நேரத்தில் வீசிய தென்றலும், அப்பகுதியின் இயற்கை அழகும் அவரது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வைத்தன.  இயற்கையை இரசித்தவண்ணம் மெல்லிசையைக் கேட்டுக்கொண்டே சென்ற அவரது ஆசையில் வாகனத்தை மெதுவாக ஓட்டிக்கொண்டிருந்தார். திடீரென அவரது வாகனம் நின்றது. கீழே இறங்கிப் பார்த்தார். வாகனத்தின் ஒரு சக்கரத்தில் ஆணி குத்தி அது பழுதடைந்துவிட்டது. அந்நேரத்தில் அந்த நெடுஞ்சாலையில் ஆள்நடமாட்டமே இல்லை. வேறு எந்த வாகனமும் அவ்வழியில் வருவதாகத் தெரியவில்லை. தனது நண்பர்களை தொலைபேசியில் உதவிக்கு அழைத்தார். அவர் இருக்கும் இடத்திற்குவர, குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று அவர்கள் கூறினார். ஆதலால், அந்த பணக்காரரே ‘ஸ்டெப்னி’யை மாற்றத் தொடங்கினார். அப்போது, அந்த சக்கரத்திலிருந்த நான்கு திருகுகளையும் எடுத்தபோது, அவரது கால் தடுமாறியது. அந்த திருகுகளும் உருண்டு அருகிலிருந்த சாக்கடையில் விழுந்துவிட்டன. சாக்கடையில் எப்படி இறங்குவது என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் அவர். அந்நேரம் பார்த்து அந்தப் பக்கம் ஒருவர் வந்தார். பார்ப்பதற்கு அசிங்கமாய், பரட்டைத்தலையுடன் பிச்சைக்காரர்போல் காணப்பட்டார். அந்த பணக்காரர், அவரை அணுகி, சாக்கடையில் விழுந்த திருகுகளை எடுத்துத்தருமாறு கேட்டார். அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்துவிடுகிறேன் என்றும் அவர் கூறினார். ஆனால் அந்த வழிபோக்கர், பணக்காரரை ஏறெடுத்துப் பாரத்துவிட்டு, சார், நாம் இருவருமே இந்த சாக்கடையில் இறங்கத் தேவையில்லை. அவை இல்லாமலேயே நீங்கள் இந்த வாகனத்தை ஓட்டிச்செல்லலாம் என்று கூறினார். பிச்சைக்காரனாகிய  நீ எனக்கு ஆலோசனை சொல்கிறாயா என்று கோப வார்த்தைகளை அள்ளி வீசினார் பணக்காரர். அப்போது அந்த வழிபோக்கர் அமைதியாக, சார் நான் ஒரேயொரு ஆலோசனை மட்டும் சொல்கிறேன். இந்த வாகனத்தின் மற்ற மூன்று சக்கரங்களிலுள்ள நான்கு திருகுகளில் ஒவ்வொன்றைக் கழற்றி இதில் மாட்டிவிட்டால், நீங்கள் மெதுவாக அருகிலிருக்கும் பழுதுபார்க்கும் இடத்திற்கு இதை ஓட்டிச் சென்றுவிடலாம் என்று சொன்னார். இதைக் கேட்டதும், பிச்சைக்காரர் மாதிரி இருக்கும் இந்த ஆளுக்குத் தெரிந்ததுகூட நமக்குத் தெரியவில்லையே என்று, அந்த பணக்காரர் ஆச்சரியப்பட்டார்.

சிந்தனைக்கு - யார் எப்படி இருந்தாலும் மூளை என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். ஒவ்வொருவரும் அதை எந்த முறையில் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வழிபோக்கர் சொன்ன ஆலோசனை அந்த பணக்காரருக்குத் தோன்றவில்லை. எனவே, எந்த ஒரு சூழலிலும் யாரையும் ஏளனமாகப் பார்ப்பதோ, குறைத்து மதிப்படுவதோ அலட்சியப்படுத்தி பேசுவதோ, தான் என்ற ஆணவத்தில் பேசுவதோ இருக்கவே கூடாது. நாம் உண்மையிலேயே எவ்வளவு பெரிய அறிவியல் மேதையாக இருந்தாலும், வாழ்வில் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன என்ற உணர்வு எப்போதும் இருக்கவேண்டும்.

10 July 2020, 10:07