தேடுதல்

Vatican News
சென்னையில் பிறரன்புப் பணியாற்றும் ஆட்டோக்கள் சென்னையில் பிறரன்புப் பணியாற்றும் ஆட்டோக்கள் 

விதையாகும் கதைகள்: புண்ணிய செயல்கள் தொடரட்டும்

ஒருவர் ஆற்றும் புண்ணியச் செயல்கள், சங்கிலித்தொடர்போல் அடுத்தவரைத் தொற்றிக்கொள்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்று சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணி ஒருவர், ஓர் ஆட்டோ ஓட்டுனரிடம், பெருங்களத்தூர் செல்ல, எவ்வளவு என்று கேட்டார். அவரும் 500 ரூபாய் என்றார். 400க்கு வருவியா என்று பயணி கேட்டார். சரி, 450 ரூபாய், ஏறுங்கள் சார் என்றார். ஆட்டோவும் புறப்பட்டது. அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, ஆட்டோக்காரர் வழக்கமாக காலை உணவு சாப்பிடும் கடை அருகில் நிறுத்தச் சொன்னார் பயணி. ஒரு நடுத்தர வயதுடைய பெண், பார்ப்பதற்கு கைம்பெண் போன்று இருந்தார். அவர் நடத்திய சாலையோரக் கடையில், ஆட்டோவை நிறுத்தினார் ஓட்டுனர். அவ்விருவரும் காலை உணவை முடித்தனர். இதற்கு 150 ரூபாய் என்றார் அந்தப் பெண். பயணியோ 200 ரூபாய் கொடுத்தார். அந்தப் பெண், மீதிப் பணத்தைக் கொடுப்பதற்காக, காசு பெட்டியைத் தேடினார் அப்போது அந்தப் பயணி, இல்லம்மா நாளை இந்தப் பக்கம் வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஆட்டோவில் ஏறினார். அப்போது ஆட்டோக்காரர், சார், நீங்க பெருங்களத்தூர் போய், பின்னர் சிதம்பரம் போறீங்க.. நாளைக்கு வருவேன்னு எப்படிச் சொன்னீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், தம்பி இப்போது நாம் சாப்பிட்ட உணவை ஓர் உணவகத்தில் சாப்பிட்டிருந்தால், நிச்சயம் 500 ரூபாய் கேட்பார்கள். அதுபோக, டிப்ஸ், வரி என 600-ரூபாய் கொடுத்திருப்போம். ஆதலால், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம்,  இந்த மாதிரி ஆள்களுக்கு நாம் உதவவேண்டும் தம்பி என்று சொன்னார். அவர் மீண்டும், தம்பி, புண்ணியத் தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது, உண்டியலில் பணம் போடுவது போன்றவை வழியாகத்தான் நாம் புண்ணியம் தேட வேண்டும் என்பது இல்லை என்றும் சொன்னார். பெருங்களத்தூர் வந்து சேர்ந்ததும், அந்த பயணி, ஆட்டோ ஓட்டுனரிடம், 450 ரூபாயை எடுத்துக்கொடுத்தார். ஆனால் ஆட்டோ ஓட்டுனரோ, சார் 400 ரூபாய் போதும், ஏனெனில், அந்த 50 ரூபாய் உங்களிடம் இருந்தால், இந்த மாதிரி யாருக்காவது நீங்கள் உதவி செய்வீர்கள், அதன் வழியாக எனக்கும் புண்ணியம் கிடைக்கட்டும் என்று கூறினார். ஆம், ஒருவர் ஆற்றும் புண்ணியச் செயல்கள், அடுத்தவரையும் தொற்றிக்கொள்கின்றன. எனவே புண்ணிய செயல்களைத் தொடர்ந்து ஆற்றுவோம். 

06 July 2020, 12:55