தேடுதல்

Vatican News
பறவைகள் பலவிதம் பறவைகள் பலவிதம்   (Dibyendu_Ash www.goingwild.in)

விதையாகும் கதைகள் : மகிழ்ச்சி யாருக்கு?

கடவுள் கொடுத்துள்ளதற்கு நன்றி கூறி, அவர் கொடுத்துள்ளதை மதித்து, நம்மை நாமே அன்புகூர கற்றுக்கொள்ளவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஓர் ஊரில் ஒரு காகம் இருந்தது. அது அதிக மகிழ்ச்சியாக இருந்தது, ஒரு கொக்கை பார்க்கும்வரை. அது கொக்கை பார்த்துச் சொல்லியதாம், நீ வெள்ளையாக  எவ்வளவு அழகா இருக்க. கறுப்பா இருக்கும் என்னை எனக்குப் பிடிக்கவில்லை, என்று.

கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும்வரை. அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கிறது தெரியுமா? என்றது.

காகமும் கிளியிடம் சென்று கேட்டவுடன், அது சொன்னது, உண்மைதான். நான் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன், ஆனால் ஒரு மயிலை பார்க்கும்வரை. அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கிறது தெரியுமா? என்றது.

உடனே காகமும், மயில் இருக்கும் ஒரு மிருகக் காட்சிசாலை சென்று, அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மயிலை பார்க்கக் காத்திருப்பதைப் பார்த்து நினைத்தது, இதுதான் மகிழ்ச்சி என்று.

அழகு மயிலே, உன்னைக்காண இவ்வளவு பேர். என்னைப்பார்த்தாலே இவர்கள் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள். என்னைப்பொருத்தவரை, உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர், என்றது.

மயில் சொன்னது, அன்பு காகமே, நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன், நான் தான் அழகு, மற்றும், மகிழ்ச்சியான பறவை என்று. ஆனால், எனது இந்த அழகுதான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்துவிட்டது. இந்த மிருகக் காட்சிசாலை முழுதும் நான் பார்த்ததில், காகம் மட்டுமே பூட்டி வைக்கப்படவில்லை. எனவே, நான் யோசிப்பது எல்லாம், நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஆனந்தமாகச் சுற்றி வரலாமே, என்றுதான்.

நமது பிரச்சனையும் இதுதான். நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ளச் செய்கிறோம்.

கடவுள் கொடுத்துள்ளதற்கு நன்றி கூறி, அவர் கொடுத்துள்ளதை மதித்து, நம்மை நாமே அன்புகூரக் கற்றுக்கொள்ளவேண்டும். நம்மை, நம்மைவிட வேறு யாரும் நேசிக்க முடியாது.

24 July 2020, 22:43