தேடுதல்

இந்தியாவின் ஜம்முவில் சிறார்களுக்கு இலவச முக கவசம் வழங்குதல் இந்தியாவின் ஜம்முவில் சிறார்களுக்கு இலவச முக கவசம் வழங்குதல்  

ஒருவேளை உணவை இழந்த 55 விழுக்காட்டினர்

இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்போதையை சூழல், 40 விழுக்காட்டு குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கொரோனா முழு ஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 15 வரையிலான காலத்தில், 55 விழுக்காட்டு மக்கள், ஒருநாளைக்கு இருவேளை மட்டுமே உணவு எடுத்து கொண்டதாக, கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

குழந்தைகள் உரிமைகளுக்காக உழைக்கும் தனியார் தொண்டு நிறுவனமான 'வேர்ல்டு விஷன் ஆசியா பசிபிக்' வெளியிட்ட 'ஆசியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மீதான கொரோனா தாக்கத்தை வெளிப்படுத்துதல்' என்ற அறிக்கையில், இந்திய குடும்பங்கள், பொருளாதாரம், உடல், மற்றும் மனரீதியாக அடையும் சிரமங்கள், குழந்தைகளை எதிர்மறையாக பாதித்துள்ளது, மற்றும், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடையவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

24 மாநிலங்கள் மற்றும் டில்லி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பகுதிகளை சேர்ந்த 5,668 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 60 விழுக்காட்டிற்கும் அதிகமான பெற்றோர் அல்லது குழந்தைகளை பராமரிப்போரின் வாழ்வாதாரங்கள் கொரோனா காரணமாக முழுமையாகவோ அல்லது கடுமையாகவோ பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், அதிக எண்ணிக்கையில் தினக்கூலிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

நகர்ப்புறங்களில் வசிக்கும் 67 விழுக்காட்டு பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள், வேலையை இழந்துள்ளனர், மற்றும், மலிவு விலையில் உணவு பொருட்கள் கிடைப்பது சவாலானதாக மாறியதால், 55.1 விழுக்காட்டு குடும்பத்தினர் நாளொன்றுக்கு இருவேளை மட்டுமே உணவு எடுத்து கொண்டதாக கூறியுள்ளனர்.

வருமான இழப்பு, பள்ளிகள் மூடல், குழந்தைகளின் நடத்தை மாற்றம், மற்றும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக குடும்பங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், குழந்தைகளுக்கு உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான தண்டனையாக உள்ளது எனவும், தற்போதையை சூழல் 40 விழுக்காட்டு குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

20ம் தேதி, இத்திங்கள் காலை வரையுள்ள நிலவரப்படி, இந்தியாவில் 11 இலட்சத்து 18 ஆயிரத்து 780 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். (Dinamalar)

20 July 2020, 14:05