தேடுதல்

Vatican News
மதுரையைச் சேர்ந்த துரைராஜ் மதுரையைச் சேர்ந்த துரைராஜ்  

வாரம் ஓர் அலசல்: ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம்

பிரச்சனைக்கு நாம் அடிமையா அல்லது பிரச்சனை நமக்கு அடிமையா, முடிவு செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவர் கையில்தான் உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

எத்தனை பேரிடர்கள் வரினும் அவற்றை உதறித்தள்ளி வீறுகொண்டு தலைநிமிர்ந்து நிற்கும் நாடு என்று நினைக்கும்போது உடனடியாக நம் கண்முன்வருவது  ஜப்பான். பல ஆண்டுகளுக்கு புல்பூண்டுகள்கூட முளைக்க முடியாத அளவுக்கு அணுகுண்டால் கடுமையாய்த் தாக்கப்பட்ட பூமி அது. அதேநேரம் எத்தனை அணுகுண்டு வீசப்பட்டாலும், வெள்ளம், சுனாமிகள், அணுஉலைகள் கசிவு போன்ற எத்தனை பேரிடர்கள் அந்நாட்டைக் கடுமையாய்ப் பாதித்தாலும், அவற்றிலிருந்து மீண்டெழுந்து, உலகில் முதல்தர நாடுகளில் ஒன்றாக தன்னை தக்கவைத்து வருகிறது இந்நாடு. டைட்டானிக் சொகுசு பயணியர் கப்பல் 1912ம் ஆண்டு பனிப்பாறையில் மோதி உடைந்தது பற்றிய திரைப்படத்தைப் நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அதில் ஜப்பானிய இளைஞர் ஒருவர் உயிர்பிழைத்தது பற்றியும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அந்தக் கப்பல் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர்கள், அந்தக் கப்பலோடு அதிகமான உயிர்காக்கும் படகுகளை அமைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே அந்த விபத்து நடந்தபோது, அங்கிருந்த படகுகளில் முதலில் பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அச்சமயத்தில், அந்த கப்பலில் பயணம் மேற்கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், பெண் போன்று ஆடையணிந்து கொண்டான். அவனை பெண் என்று நம்பி, அவனைப் படகில் ஏற்றினர். அவனும் உயிர் பிழைத்தான். அந்த ஜப்பானிய இளைஞனின் அறிவுக்கூர்மையைக் கண்டு ஐரோப்பாவும், அமெரிக்காவும் வியந்தன. ஒரு சூழ்நிலையை தனக்குச் சாதகமாக எவ்வாறு மாற்றிக்கொள்ளலாம் என்பதற்கு, அந்த இளைஞன், மற்ற இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அந்நாடுகள் பாராட்டின. அந்த இளைஞனை வேறு ஒரு கப்பலில் ஜப்பானுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர். அவனுக்கு ஜப்பானில் பெரிய வரவேற்பு ஒன்று காத்திருந்தது. அவனும் மிகுந்த மகிழ்வுடன் தனது தாயகத்தில் காலடி எடுத்துவைத்தான். அப்போது அந்த இளைஞனைப் பெற்றெடுத்த தாய், அவனை செருப்பால் அடித்தார். அவனது சகோதரிகள் அவன்மீது வசைச்சொற்களை வீசினர். இதற்கு என்ன காரணம்?. ஒரு பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய இடத்தை நீ தட்டிப் பறித்துவிட்டாயே, நீ எனக்கு மகனாக இருப்பதைவிட, முதலில் நல்ல மனிதனாக இரு என்று சொல்லி, அவனை வீட்டைவிட்டு அவர்கள் வெளியேற்றிவிட்டனர். இவ்வாறு தனது பிள்ளை மட்டுமல்ல, உலகில் எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற தாயுள்ளம் படைத்த அன்னையர் ஜப்பானில் உள்ளனர் என்பதற்கு, இந்நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது.

நாட்டுப்புற கதை

ஜப்பானில், நாட்டுப்புற கதை ஒன்று உண்டு. ஓர் ஊரை நோக்கி மற்றோர் ஊர் படையெடுத்து வந்தது. தாக்குதலுக்கு அஞ்சி, அந்த ஊரில் இருந்த வயதானவர்கள் பெண்கள், குழந்தைகள் போன்ற பலரும் மாட்டுவண்டிகளில் ஏறி தப்பித்துச் சென்றனர். அச்சமயத்தில், இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டுவந்த தாய் ஒருவர், இரவும் பகலும் தொடர்ந்து அழுதுகொண்டே சென்றார். அதே வண்டியில் இருந்த துறவி ஒருவர், அம்மா ஏன் அழுதுகொண்டே இருக்கிறாய், ஒரு குழந்தையையாவது காப்பாற்றிவிட்டாயே என்று நினைத்து ஆறுதலாக இரு என்று தேற்றினார். அதற்கு அந்த தாய், துறவியாரே, நான் ஊரில் விட்டுவந்தது என் குழந்தை, இப்போது என் கையில் இருப்பது பக்கத்துவீட்டு குழந்தை என்று சொன்னார். எனது குழந்தை மட்டுமல்ல, எல்லாக் குழந்தைகளும் கடவுளுடைய சொத்து, அவர்களைக் காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்று, அந்த ஜாப்பான் நாட்டு நாட்டுப்புற கதை முடிகிறது.

அறநெறி வாழ்வுமுறை

ஜப்பான் நாட்டு மக்கள் மத்தியில், எல்லாமே சரியாக இருக்கவேண்டும் என்ற ஓர் அறநெறி வாழ்வுமுறை இருப்பதை, அந்நாட்டில் பயணம் மேற்கொண்டோர் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஜப்பானுக்குச் சென்ற தமிழர் ஒருவர், பார்த்த விடயம் அவருக்கு வியப்பைக் கொடுத்ததாம். அவர் நகரப்பேருந்தில் பயணம் செய்தபோது, ஒரு வயதுமுதிர்ந்த பெண் அவருக்குமுன் இருக்கையில் வந்து அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்தவுடன் தனது கைப்பையைத் திறந்து ஊசி நூலை எடுத்து, அந்த இருக்கையில் கிழிந்திருந்த இடத்தை, பத்து நிமிடத்திற்குள் தைத்து முடித்துவிட்டுச் சென்றாராம்.

6852 தீவுகளைக் கொண்ட நாடு ஜப்பான். இத்தீவுகளில் கல்வியறிவு அதிகம் இல்லாத பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ஓரேயோர் இரயில் சேவையை நிறுத்துவதற்கு அதிகாரிகள் தீர்மானித்தனர். அதற்குரிய நாளும் நேரமும் குறிக்கப்பட்டது. அந்த இரயிலின் கடைசிப் பயணத்தைப் பார்க்கச் சென்ற  ஒரு புகைப்படக்காரர், அதில் ஒரேயொருவர் மட்டும் பயணம் செய்ததைக் கண்டு புகைப்படம் எடுத்து, அடுத்தநாள் தினத்தாள்களில் வெளியிட்டார். அது, அந்தப் பகுதியிலிருந்து, நகரத்திலுள்ள பள்ளிக்குச் சென்ற சிறுமி ஒருவரின் புகைப்படம். அதைப் பார்த்த நூற்றுக்கணக்கான பணியாள்கள், அந்த இரயில் பாதையில் ஒவ்வொரு நாளும் குவியும் பனிகளை அகற்ற தயார் என்று அறிவித்தனர். அந்நாட்டு பிரதமரும் பாராளுமன்றத்தில், அந்தச் சிறுமி படித்துமுடிக்கும்வரை அந்த இரயில் சேவை தொடரும் என்று அறிவித்தார் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஜப்பானில் அதி வேகமாக செல்லக்கூடிய இரயில், ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும், அந்த இரயிலின் ஓட்டுனர் ஒவ்வொரு பயணியிடமும் சென்று சிரம்தாழ்த்தி மன்னிப்பு கேட்பாராம்.

இந்த தகவல்களை வாட்சப்பில் பகிர்ந்துகொண்டுள்ள ஒருவர், உடன்வாழும் மனிதரை, அவர்களின் உழைப்பை எவ்வாறு மதிக்கவேண்டும் என்பதற்கும், எவ்வளவு பிரச்சனைகள் குறுக்கிட்டாலும், எத்தனை இடர்கள் வந்தாலும், அவற்றிலேயே மூழ்கிவிடாமல், வாழ்வில் முன்னேறுவதற்கும் ஜப்பான் மக்கள் ஓர் எடுத்துக்காட்டு என்றும், இந்நாடு பீனிக்ஸ் பறவை போன்றது என்றும், இந்நாடு பற்றிய தனது எண்ணத்தை, அவர் பதிவுசெய்துள்ளார்.

திரும்பிய திசையெல்லாம் ஏதாவது ஒரு சிக்கல் புதிய வடிவத்தில் வந்து நிற்கிறதே, இந்த கோவிட்-19ஆல் வருங்காலம் கேள்விக்குறியாகி உள்ளதே என்று கலங்குபவர்களுக்கு, ஜப்பானியரின் வாழ்வுமுறை மட்டுமல்ல, மற்ற பலரின் வாழ்வும், ஓர் உந்துசக்தியாக உள்ளது.  

மதுரை துரைராஜ்

மதுரையைச் சேர்ந்த துரைராஜ் என்ற இளைஞர், மாற்றுவழியில் சிந்தித்ததன் பயனாக, கோவிட்-19 ஊரடங்கால் முடங்கிய தொழிலுக்கு உயிர்கொடுத்துள்ளார். இவர், மதுரை அண்ணா நகர் பகுதியில், விளையாட்டு வீரர்கள் உடைகள் தயார் செய்யும் சிறிய நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். பல்வேறு விதமான உடைகளைத் தயார் செய்து பல இடங்களுக்கு அனுப்பிவருகிறார். இவரிடம் பத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவர், கொரோனாவால் இறந்ததால், அவர்கள் பகுதி முழுமையாக முடக்கப்பட்டது. என்ன செய்வது என்று சிந்தித்தபோது, முகக்கவசங்களுக்கு தேவை இருப்பதை உணர்ந்தார் அவர். வியாபார நோக்கத்தோடு மட்டும் இல்லாமல், சமுதாயச் சிந்தனையாகவும் இருக்க வேண்டும் என்று, நல்ல பிரின்டிங் முகக்கவசங்களை, உருவாக்க ஆரம்பித்தார் அவர். குழந்தைகள் கவசங்களை அணிய விரும்புவதில்லை என்று அறிந்து, அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் பொம்மைகளை அவற்றில் பொறிக்கத் தொடங்கினார். இவ்வாறு, இளைஞர், பெண்கள் போன்ற பலதரப்பினரும் விரும்பும் முறையில், இவற்றை இவர் தயாரித்து வருகின்றார். ஒரு நாளைக்கு 6,000 முகக்கவசங்களுக்கு மேல் விற்பனை செய்வதாக, விகடன் நிருபரிடம் சொல்லியுள்ள இவர், தனது நிறுவனத்தில் ஏற்கெனவே டி-ஷர்டில் பிரின்டிங் தயாரிக்கும் இயந்திரம் இருப்பதால், முகக்கவசம் பிரின்டிங் எளிமையாக உள்ளது என்று கூறியுள்ளார். எங்களிடம் இருக்கும் வேலையைச் சற்று மாற்றியதால், தற்போது பிழைத்துக்கொண்டோம் என்று, நம்பிக்கையுடன் கூறியுள்ளார், மதுரை துரை ராஜ்.  

எந்த ஒரு பிரச்சனை பற்றியும் ஒரு நாளைக்குமேல் கவலைப்படக் கூடாது. அப்படி வருத்தப்பட்டால் அந்தப் பிரச்சனைக்கு நாம் அடிமையாகி விடுவோம். அதற்கு மாறாக, ஒரே நாளில் அந்த பிரச்சனையை உதறித்தள்ளிவிட்டு அடுத்த அடி எடுத்து வைத்தால், அந்த பிரச்சனை நமக்கு அடிமையாகி விடுவோம். அதற்குப்பின், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை உதறித்தள்ளிவிட்டு முன்னோக்கிச் சென்றுகொண்டுதான் இருப்போம்.

பிரச்சனைக்கு நாம் அடிமையா அல்லது பிரச்சனை நமக்கு அடிமையா, முடிவு செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவர் கையில்தான் உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உள்ளது. அதுபோல் நமது பிரச்சனைகள் தீர்வதற்கும் காலம் உள்ளது. ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் துணிந்து நிற்போம்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம்
08 June 2020, 14:20